"அமைச்சர் பதவி ஆசை காட்டினார்கள்... ஆனால் ராஜினாமா செய்யவில்லை"!வைகோ மீது மதிமுக எம்.எல்.ஏ.க்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
They dangled the prospect of a ministerial post but he didnot resign MDMK MLAs level sensational allegations against Vaiko
திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக எம்.எல்.ஏ.க்களான கடையநல்லூர் ராஜேந்திரன் மற்றும் சீர்காழி செந்தில் செல்வன், தங்களை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகவும், அதற்கு இணங்க மறுத்ததாகவும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், தேர்தல் வெற்றிக்குப் பிறகு திமுக கொறடாவின் அறிவுறுத்தலின்படி செயல்படுமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதாக தெரிவித்தனர்.
ஆனால், ஜூன் 16-ஆம் தேதி தமிழக அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு வைகோவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் தங்களிடம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தொகுதி மக்களிடமும் கட்சி நிர்வாகிகளிடமும் ஆலோசித்தபோது, "ராஜினாமா செய்யக் கூடாது; மக்களின் வாக்கை மதிக்க வேண்டும்" என்ற கருத்தே பெரும்பான்மையாக இருந்ததாக தெரிவித்தனர். அந்த கருத்தை வைகோவிடம் எடுத்துரைத்த போதும் அவர் ஏற்கவில்லை என்றும் கூறினர்.
மேலும், "ஆளும் கட்சி கூட்டணியில் இணையலாம், மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும், அமைச்சராக கூட ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகள் கூறப்பட்டன. ஆனால் எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்த விரும்பாததால், அந்த அழுத்தங்களுக்கு மயங்காமல் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தோம்" என தெரிவித்தனர்.
அதேநேரத்தில், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, "இரு எம்.எல்.ஏ.க்களும் ஒரு மாதத்திற்கு முன்பே விலை போய்விட்டார்கள்" என்று கூறியதாகவும், அந்த குற்றச்சாட்டு தங்களை மிகவும் வேதனைப்படுத்தியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
"40 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வைகோவுடன் பயணித்தோம். ஆனால் இன்று இழிவான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளோம்" என்று அவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
தொடர்ந்து, "சிறுவயது முதலே நேசித்த திமுகவின் எம்.எல்.ஏ.க்களாகவே தொடர்ந்து செயல்படுவோம். திமுக தலைவர் ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றோம். திராவிடக் கொள்கைகள் வலுப்பெறவும், திமுக மீண்டும் ஆட்சி அமைக்கவும் களத்தில் பணியாற்றுவோம்" என்றும் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், தங்களை பொதுவாழ்க்கையில் அறிமுகப்படுத்திய வைகோவுக்கும், மதிமுகவின் உண்மையான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
English Summary
They dangled the prospect of a ministerial post but he didnot resign MDMK MLAs level sensational allegations against Vaiko