தபால் மூலம் வாக்களிக்க முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செய்ய வேண்டியது என்ன..? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
What must senior citizens and persons with disabilities do to vote by post
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 04 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்த 2026 தேர்தலில், 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பப் படிவம் 12D வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்த விரும்பும் தகுதியுள்ள வாக்காளர்கள், படிவம் 12D (Form 12D) ஐ சமர்ப்பித்து வீட்டிலிருந்து வாக்களிக்கும் விருப்பத்தை தெரிவிப்பவர்களுக்கு படிவம் 12D வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாக்களிக்க தகுதி பெற்ற 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேற்பட்ட வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வீட்டிற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) நேரடியாகச் சென்று படிவம் 12D-ஐ வழங்குவார்கள். அதேபோல், நிரப்பப்பட்ட படிவத்தையும் அவர்களிடமிருந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக பெற்றுக் கொள்வார்கள்.
இந்த 12D படிவம் தேர்தல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தொடங்கி அந்த தேர்தலுக்கான அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளுக்கு அடுத்த 05 நாட்களுக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கிடைக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதாவது பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 12D -ஐ ஏப்ரல் மாதம் 04-ஆம் தேதிக்குள் திரும்ப வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதன் போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை தொடர்பு கொள்ள இயலாதவர்கள் 1913 (அ) மாவட்ட தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண், 1800 425 7012 -ஐ தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் இந்த தகவலை தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தெரிவித்து 12D படிவம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த வசதி முழுமையாக விருப்பத் தேர்வாகும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், வாக்குச்சாவடியில் நேரில் சென்று வாக்களிக்க விரும்பும் தகுதி பெற்ற வாக்காளர்கள் படிவம் 12D சமர்ப்பிக்க தேவையில்லை என்றும், அவர்கள் வழக்கம் போல் தங்களுக்குரிய வாக்குச்சாவடியில் நேரில் சென்று வாக்களிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
English Summary
What must senior citizens and persons with disabilities do to vote by post