பயன்பாட்டு கட்டணத்தை திடீரென உயர்த்தி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி கொடுத்துள்ள சொமாட்டோ; கேஸ் சிலிண்டர் தட்டுபாட்டினால் உணவில் விலை உயர்ந்துள்ள நேரத்தில் இப்படியா..?
Zomato shocks customers by suddenly hiking service charges
பிரபல ஆன்லைன் உணவு ஆர்டர் டெலிவரி நிறுவனமான சொமாட்டோ தனது பயன்பாட்டு கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்தியாவின் ஆன்லைன் உணவுச் சந்தை ஆண்டுக்கு சுமார் 25-30% வளர்ச்சியைக் கண்டு வருகிறது. தற்போது இந்தத் துறையில் சொமாட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகிய இரு நிறுவனங்கள் 90%-க்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன.
இதனுடன், ராபிடோ மற்றும் அரசு ஆதரவு பெற்ற ONDC ஆகியவையும் இணைந்துள்ளன. ONDC தளம் குறைந்த கமிஷன் வசூலிப்பதன் மூலம் உணவகங்களுக்கு அதிக லாபத்தையும், வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையையும் வழங்க முயற்சி செய்கிறது.
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான சொமாட்டோ தனது லாப வரம்பை அதிகரிக்கும் நோக்கில் 'பிளாட்பார்ம் கட்டணத்தை' மீண்டும் உயர்த்தியுள்ளது. இன்று முதல் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இந்த மாற்றத்தின்படி, ஒரு ஆர்டருக்கான பிளாட்பார்ம் கட்டணம் ரூ. 12.50-லிருந்து ரூ. 14.90 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் 18% ஜிஎஸ்டி (GST) வரியும் சேரும்போது, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை உணவு ஆர்டர் செய்யும்போதும் பிளாட்பார்ம் கட்டணமாக மட்டும் சுமார் ரூ.17.58 செலுத்த வேண்டி வரும்.
இது முந்தைய கட்டணத்தை விட சுமார் 19.2% உயர்வாகும். குறிப்பாக, பிளாட்பார்ம் கட்டணம் என்பது உணவின் விலை அல்லது டெலிவரி கட்டணத்தில் அடங்காது. இது செயலியைப் பயன்படுத்துவதற்காக நிறுவனம் வசூலிக்கும் ஒரு தனிப்பட்ட கட்டணமாகும். தற்போது ஈரான் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சூழலில், ஹோட்டல்களில் உணவுகளின் விளையும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் சொமாட்டோ தனது பயன்பாட்டு கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளமை வாடிக்கையாளர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Zomato shocks customers by suddenly hiking service charges