ஓபிஎஸ்க்கு திமுகவில் மாநில அளவிலான பதவி? துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்க திட்டம் என தகவல் - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திமுகவில் மாநில அளவிலான முக்கியப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக, துணைப் பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து, அதில் ஓபிஎஸ்ஸுக்கு முக்கிய பொறுப்பு வழங்குவது குறித்து திமுக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவின. குறிப்பாக, ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் சில முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது.

தேனி மாவட்ட அரசியலில் நீண்ட காலமாக முக்கிய சக்தியாக இருந்த ஓபிஎஸ், திமுகவுடன் இணைந்த பிறகும் கட்சியில் குறிப்பிடத்தக்க பதவி எதுவும் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாகவே மாற்று அரசியல் வாய்ப்புகள் குறித்து அவர் ஆலோசித்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால், மீண்டும் கட்சி மாறுவது சரியாக இருக்காது என்ற எண்ணத்தில் ஓபிஎஸ் இருப்பதாகவும், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய அவர் தயாராக இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு எதிராக ஓபிஎஸ் தெரிவித்த சில கருத்துகள் திமுக தலைமை கவனத்தை ஈர்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஓபிஎஸ்ஸை கட்சியில் மேலும் முக்கியத்துவப்படுத்துவது குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

திமுகவில் தற்போது நடைபெற்று வரும் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 100-க்கும் மேல் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மட்டுமின்றி, தேர்தலுக்கு முன்பாக மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு மாவட்ட அளவிலான பதவியை வழங்காமல் மாநில அளவில் முக்கியப் பொறுப்பு வழங்க வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் துணைப் பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து, அந்தப் பொறுப்புகளில் ஒன்றை ஓபிஎஸ்ஸுக்கு வழங்குவது குறித்து திமுகவில் ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ஓபிஎஸ் தரப்பினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் மட்டுமின்றி, அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோருக்கும், விசிகவில் இருந்து வந்த பனையூர் பாபு உள்ளிட்ட சிலருக்கும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அமைப்புப் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் திமுகவின் மறுசீரமைப்பு பட்டியலில் புதியவர்களுக்கும், மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்த முக்கிய அரசியல் முகங்களுக்கும் அதிக இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை இவை கட்சி வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களாகவே உள்ள நிலையில், திமுகவின் அடுத்தகட்ட அமைப்பு மாற்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு என்ன பொறுப்பு வழங்கப்படுகிறது என்பதே முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A state level post for OPS in the DMK Reports suggest a plan to assign him the role of Deputy General Secretary


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?




Seithipunal
--> -->