டாஸ்மாக் மதுபானங்களுக்கு ஒரே நாளில் தடை நீக்கம்! 11 வகை மதுபானங்கள் மீண்டும் விற்பனைக்கு?காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை, மறுநாளே நீக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை சுவையூட்டிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி நேற்று விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.

தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை விநியோகிக்கும் என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் கடந்த 11ஆம் தேதி உணவு தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது. பூந்தமல்லி பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் அந்த நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், குறிப்பிட்ட சில மதுபானங்களில் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, அந்த நிறுவனத்தால் வழங்கப்படும் 11 வகை மதுபானங்களின் விற்பனையை நிறுத்துமாறு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் குறிப்பிட்ட மதுபானங்கள் நேற்று டாஸ்மாக் கடைகளில் கிடைக்காத நிலையில், அவற்றை வழக்கமாக வாங்கும் மதுப்பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஆனால், தடை விதிக்கப்பட்ட அடுத்த நாளே நிலைமை மாறியுள்ளது. குறிப்பிட்ட மதுபானங்களை மீண்டும் விற்பனை செய்யலாம் என உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் அவற்றின் மீதான தடையை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், தரக்குறைவு காரணமாக தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்ட மதுபானங்களுக்கு ஒரே நாளில் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது எப்படி? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மேலும், முதலில் எந்த அடிப்படையில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது, பின்னர் எந்த ஆய்வு அல்லது புதிய அறிக்கையின் அடிப்படையில் தடை நீக்கப்பட்டது என்பது குறித்தும் தெளிவான விளக்கம் தேவை என்ற கருத்து எழுந்துள்ளது.

குறிப்பாக, செயற்கை சுவையூட்டிகள் அதிகமாக இருப்பதாகக் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே அதே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கை உண்மையில் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது? தடை விதிக்கப்பட்டதற்கும், ஒரே நாளில் அதை நீக்கியதற்கும் என்ன காரணம்? என்பதற்கு டாஸ்மாக் நிர்வாகமும் உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளும் விரிவான விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ban on TASMAC liquor lifted in a single day Are 11 types of liquor back on sale What is the reason


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?




Seithipunal
--> -->