காதலியை கொலை செய்துவிட்டு தலைமறைவான புதுச்சேரி ரௌடி காட்பாடி ரயில் தண்டவாளம் அருகே சடலமாக மீட்பு..!
Puducherry rowdy who had gone into hiding after murdering his girlfriend found dead near the Katpadi railway tracks
புதுச்சேரியில் செவிலியரை கொலை செய்திட்டு, தலைமறைவான ரௌடி, ரயிலில் அடிபட்ட நிலையில் வேலூர் காட்பாடியில் உயிரிழந்து கிடந்துள்ள நிலையில், தற்கொலை செய்து கொண்டதற்கான குறிப்புகள் ஏதும் இல்லை என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரி வில்லியனூர் கோபாலன் கடை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தனுஷ்கோடி மகள் ஜெயஸ்ரீ (22). நர்சிங் முடித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கலைக்குமாரும் ஜெயஸ்ரீயும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், கலைக்குமார் பல்வேறு வழக்குகளுக்காக சிறைக்கு சென்ற நிலையில், கலைக்குமாருடன் ஜெயஸ்ரீ பேசுவதை நிறுத்தியுள்ளார். சிறையில் இருந்து வெளியில் வந்தபிறகு ஜெயஸ்ரீயிடம் பேச கலைக்குமார் பலமுறை முயற்சி செய்துள்ளார்.
ஆனால், ஜெயஸ்ரீ பேச மறுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 26-ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ஜெயஸ்ரீயிடம் முக்கிய விஷயம் பேச வேண்டும் எனக் கூறி கலைக்குமார் அழைத்துள்ளார். அவரது வீட்டின் அருகே உள்ள காலிமனைக்கு வரவழைத்து கொலை செய்துவிட்டு, இதில் கலைக்குமார் தலைமறைவானார்.
இதனையடுத்து, வில்லியனூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். அதன்பின்னர், தனிப்படைகள் அமைக்கப்பட்டு புதுச்சேரி, விழுப்புரம், திருப்பதி, உட்பட பல பகுதிகளில் தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று வேலூர் காட்பாடி அருகே ரயில் தண்டவாளம் அருகே ரௌடி கலைக்குமார் இறந்து கிடப்பதாக வில்லியனூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு கிடைத்த புகைப்படங்களின் அடிப்படையில் இறந்து கிடந்தது ரௌடி கலைக்குமார் தான் என்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
அவர் ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, அவரது உடலை புதுச்சேரி கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் விசாரித்தபோது, இறந்து கிடந்தவரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டபோதுதான் இறந்தவர் கலைக்குமார் என்பது தெரிந்தது. அந்த எண் அவரது அம்மா எண் என தெரியவந்துள்ளது.
அத்துடன், ''சென்னை நோக்கி சென்ற ரயில் மோதி அவர் இறந்திருக்கலாம் என வழக்குப் பதிவு செய்துள்ளோம். அவர் தற்கொலை செய்து கொண்டதற்காக ஏதும் குறிப்புகள் இல்லை''என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
Puducherry rowdy who had gone into hiding after murdering his girlfriend found dead near the Katpadi railway tracks