32 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் ‘அமைதிப்படை’ – எப்போது தெரியுமா? தேர்தல் சூழலில் ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Peace Force to be re released after 32 years when do we know Fans expectations in the election environment
தமிழ் சினிமாவில் சமீப காலமாக புதிய படங்களை விட பழைய படங்களின் ரீ-ரிலீஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் பல தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது பழைய ஹிட் படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், நடிகர் சத்யராஜ் நடித்த பிரபலமான ‘அமைதிப்படை’ திரைப்படமும் தற்போது ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
மறைந்த இயக்குநர் மணிவண்ணன் கதை, வசனம் எழுதி இயக்கிய இந்த படம் 1994 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அவருடன் நடிகைகள் கஸ்தூரி, ரஞ்சிதா, சுஜாதா, அல்வா வாசு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
அரசியல் பின்னணியில் உருவான இந்த படம் அப்போது சமூகத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் வகையில் அமைந்த கதைக்களம் மற்றும் துல்லியமான வசனங்கள் காரணமாக ‘அமைதிப்படை’ ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இப்போது 32 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, படத்தின் டிரைலர் மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் என்றும், ஏப்ரல் 10ஆம் தேதி படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் இடம்பெற்ற அமாவாசை – நாகராஜ சோழன் MA, MLA என்ற கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் மிகவும் நினைவில் நிற்கும் வில்லன் பாத்திரங்களில் ஒன்றாகும். அதேபோல் தங்கவேல் கதாபாத்திரமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கூர்மையான வசனங்களும் விறுவிறுப்பான திரைக்கதையும் தான் படத்தின் மிகப்பெரிய பலமாக இருந்தது.
குறிப்பாக, இந்த படம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சுமார் 13 நாட்களுக்கு முன்பு வெளியாக இருப்பதால், தற்போதைய அரசியல் சூழலுடன் ஒப்பிட்டு பலரும் பேச தொடங்கியுள்ளனர். அதனால், ‘அமைதிப்படை’ ரீ-ரிலீஸ் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
Peace Force to be re released after 32 years when do we know Fans expectations in the election environment