பிரபல ஜப்பானிய அனிமேஷன் தொடரான 'டோரிமான்' திரைப்படங்களின் இயக்குநர் சுடோமு ஷிபாயாமா காலமானார்..!
Doraemon Director Tsutomu Shibayama Passes Away
பிரபல ஜப்பானிய அனிமேஷன் தொடரான 'டோரிமான்' திரைப்படங்களின் இயக்குநர் சுடோமு ஷிபாயாமா, தனது 84-வது வயதில் காலமாகியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களை தனது கற்பனைத் திறனால் அனிமேஷன் மூலம் கவர்ந்தவர் சுடோமு ஷிபாயாமா. இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.
1983-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டுவரை வெளியான பல 'டோரேமான்' திரைப்படங்களை இயக்கியுள்ளார். டோரிமான் கதாபாத்திரத்தை சர்வதேச அளவில் புகழ்பெறச் செய்ததில் இவரது பங்கு மிக முக்கியமானது.
சுடோமு ஷிபாயாமா மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மறைந்த இயக்குநருக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் எவ்வித மலர்வளையங்களோ அல்லது பணமுடிப்புகளோ வழங்க வேண்டாம்’ என்று அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், அவரது இறுதிச் சடங்குகள் நெருங்கிய உறவினர்களுடன் மிக எளிமையாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோரிமான் மட்டுமின்றி, 'ராக்மேன்' மற்றும் 'சிபிமருக்கோ-சான்' போன்ற புகழ்பெற்ற அனிமேஷன் தொடர்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். எதிர்காலத்திலிருந்து வந்த ஓர் இயந்திரப் பூனை (டோரேமான்) மற்றும் நோபிட்டா என்ற சிறுவனின் நட்பை மையமாகக் கொண்ட இந்தத் தொடர், இந்தியாவில் குறிப்பாகத் தமிழகக் குழந்தைகளிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பான இந்தத் தொடரின் வெற்றிக்கு ஷிபாயாமாவின் நுணுக்கமான இயக்கமே அடித்தளமாக அமைந்தது எனலாம். அவரது மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள அனிமேஷன் கலைஞர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Doraemon Director Tsutomu Shibayama Passes Away