தமிழகத்தில் நடப்பது என்ன...? சாத்தானின் ஆட்சி நடக்கிறது...! - தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் காரசார தாக்குதல்
What happening Tamil Nadu Satan rule happening MK Stalin verbal attack Tamil Nadu government
விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளும் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ஜனநாயகக் கோட்பாடுகளும், அடிப்படை உரிமைகளும் மதிக்கப்படாத ஆட்சி நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டிய அவர், தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவின் மூலம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது,"ஜனநாயக நெறிமுறைகளையும் அரசியல் நாகரிகத்தையும் முற்றிலுமாக புறக்கணித்து செயல்பட்டு வரும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.

ஆட்சியின் தவறுகள், நிர்வாக குறைபாடுகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அவலங்களை சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், சமூக வலைதள ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து குறிவைத்து நடவடிக்கை எடுப்பதே த.வெ.க. அரசின் வழக்கமான செயல்பாடாக மாறியுள்ளது.அவதூறு வழக்குகளில் கூட சம்பந்தமில்லாத குற்றப்பிரிவுகளை இணைத்து வழக்குப்பதிவு செய்வது ஏன் என்று நீதிமன்றமே அண்மையில் கேள்வி எழுப்பி கண்டித்திருந்த நிலையிலும், அதிலிருந்து எந்தப் பாடத்தையும் இந்த அரசு கற்றுக்கொள்ளவில்லை.
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கு, அவரது வழக்கறிஞர்களையும் ஆதரவாளர்களையும் சந்திக்கும் வாய்ப்புகூட மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்குத் தேவையான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் அனுமதிக்கப்படவில்லை.
கைது செய்யப்பட்ட ஒருவருக்கு சட்டப்படி வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளும், மனித உரிமைகளும் கூட பறிக்கப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுவது உண்மையில் சட்டத்தின் ஆட்சியா? அல்லது அதிகார அத்துமீறலின் ஆட்சியா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்த பிற விவகாரங்களில் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டும் அரசு, அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலோ எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்தாலோ மட்டும் உடனடியாக கைது நடவடிக்கைகளில் இறங்குவது ஏன்? ஆட்சியாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக சட்டத்தை மீறும் உத்தரவுகளை செயல்படுத்துவது காவலர்களின் கடமை அல்ல.
சட்டத்தின் வரம்பிற்குள்ளும், மனசாட்சியின் வழிகாட்டுதலுடனும் செயல்படுவது தான் அவர்களின் பொறுப்பு. இல்லையெனில் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும்" என்று மு.க.ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
What happening Tamil Nadu Satan rule happening MK Stalin verbal attack Tamil Nadu government