முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்களுக்கு சிறை தண்டனை; குற்றவியல் நீதிபதி அதிரடி உத்தரவு..!
DMK MLA Markandeyan sent to 15 day judicial custody for threatening the Chief Minister
முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது ''சட்டமன்றத்தை கூட்டும் போது உனக்கு (முதலமைச்சர் விஜய்) எலும்பு இருக்காது உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம். கேவம்கேட்ட தமிழ்நாடு என்றும் கடுமையாக விமர்சித்தோடு, சட்டமன்றத்தை கூட்டிப்பார் என்று ஒருமையாக பேசிய அச்சுறுத்தல் விடுக்கும் தொனியில் பேசியிருந்தார்.

மார்க்கண்டேயனின் இந்த பேச்சு கடும் சர்ச்சையானது. இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர்.
குறித்த புகாரின் அடிப்படையில் விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனை இன்று காலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனிடம் காவல்துறையினர் தொடர்ந்து 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவரின் உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

அப்போது மார்க்கண்டேயன், ''போலீசாரின் விசாரணையின்போது போலீஸார் என்னைத் தாக்க முயற்சித்தனர். துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்'' என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்த்தார். பின்னர் அவருக்கு மருத்துவமனை பரிசோதனை நடைபெற்றது. அப்போது அங்கு பத்திரிகையாளர்களை பார்த்து தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி திபு, நாக்கை கடித்துக் கொண்டு, ''ரவுடி'' என மிரட்டினார். இதனால், காவல்துறையினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுமதி முன்னிலையில் மார்க்கண்டேயன் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுமதி, எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார்.
English Summary
DMK MLA Markandeyan sent to 15 day judicial custody for threatening the Chief Minister