தமிழ்நாட்டில் கள்ளுக்கு கடைகளுக்கு அனுமதி குறித்து அரசு ஆய்வு..? அமைச்சர் விக்னேஷ் கூறியது என்ன..?
What did Minister Vignesh say about allowing liquor shops in Tamil Nadu
தமிழ்நாட்டில் கள்ளுக்கு அனுமதி வேண்டும் என தென்னை மற்றும் பனை விவசாயிகளின் நெடுநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு சட்டம் 1937-இன் படி, கள் விற்பனைக்கு முழு தடை இருந்து வருகிறது. ஆனாலும், கள்ளு விற்பனைக்கு அனுமதி கோரி தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கும் போராட்டத்தை நடத்தியிருந்தார்.
இந்நிலையில், தமிழக டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பது உள்ளிட்ட பிரச்சனைகளும் இருந்து வருகிறது. தவெக தலைவராக பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், பாட்டிலுக்கு 10 ரூபாய் விவகாரத்தை கரூரில் நடந்த கூட்டத்தில் பேசியதற்கு பிறகு நடந்த சம்பவங்கள் நாடு அறியும்.
இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்று தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைத்த தவெக, மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சராக விக்னேஷை நியமித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் விக்னேஷ், பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதை விரைவில் சரி செய்வோம் எனவும் தெரிவித்தார். மேலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வையும், காலிபாட்டில்களை திரும்ப பெற்று சேமித்து வைப்பதிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் 60க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது புகார்கள் வரப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் விக்னேஷிடம், தமிழ்நாட்டில் கள்ளுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''தமிழ்நாட்டில் கள்ளுக் கடை திறப்பதால் இருக்கும் சாதக பாதகங்கள் குறித்தான கோப்பை முதலமைச்சரிடம் ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். கள்ளு பற்றியான ஆய்வையும் நடத்திவருகிறோம். சரியான நேரத்தில் அது குறித்தான முடிவை அரசு எடுக்கும்.'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
What did Minister Vignesh say about allowing liquor shops in Tamil Nadu