''பெயருக்குத்தான் இது தமிழ்நாடு! ஆனால், தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடு''; கடைகளின் பெயர்களை தமிழில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


''பெயருக்குத்தான் இது தமிழ்நாடு! ஆனால், தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடு. அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் எங்குமே தமிழ் இல்லை. தமிழர் நாவினில், தமிழர் வாழ்வினில் தமிழுக்குப் பஞ்சம். தூய தமிழ் பெயர்ப்பலகைகளை தமிழ்நாட்டில் காண்பதே அரிது. தமிழ்நாட்டிலுள்ள கடைகளின் பெயர்களை தமிழில் மாற்ற வேண்டுமென்ற உயர்நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

''தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்களை நவம்பர் முதல் நாளிற்குள் தமிழில் மாற்ற வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை மனமார வரவேற்கின்றேன். வரலாற்றுச்சிறப்பு மிக்கத் தீர்ப்பினை அளித்த மாண்பமை உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பெயருக்குத்தான் இது தமிழ்நாடு! ஆனால், தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடு. அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் எங்குமே தமிழ் இல்லை. தமிழர் நாவினில், தமிழர் வாழ்வினில் தமிழுக்குப் பஞ்சம். தூய தமிழ் பெயர்ப்பலகைகளை தமிழ்நாட்டில் காண்பதே அரிது.

தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்டவும், தமிழ்நாட்டின் பொதுவெளிகளில் தமிழுக்கு உரிய முதன்மையைப் பெற்றுத்தரவும் கடந்த காலங்களிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மருத்துவர் இராமதாசு, தொல்.திருமாவளவன் தலைமையில் நான் மற்றும் பல நூறு தமிழ் உணர்வாளர்கள் இணைந்து தொடங்கிய தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், தமிழில் பெயர்ப்பலகைகள் அமைத்தல், தமிழ்மொழியைப் பொதுப்பயன்பாட்டு மொழியாக நிலைநிறுத்துதல், பிறமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழைக் காத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல கட்டப் போராட்டங்களை நடத்தியது.

தமிழ்நாட்டின் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் பொதுவெளிகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் அப்போராட்டங்களின் முதன்மையான நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இயக்கங்களின் வாயிலாக வலியுறுத்தப்பட்ட இக்கோரிக்கையை இன்று உயர்நீதிமன்றமே காலக்கெடு விதித்து நிறைவேற்ற உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழ்நாட்டில் ஓட்டல் இருக்கிறதே தவிர உணவகம் இல்லை. டீ ஷாப் இருக்கிறதே தவிர தேநீர் கடை இல்லை. லாட்ஜ் இருக்கிறதே தவிர தங்கும் விடுதி எங்கும் இல்லை. பேங்க் இருக்கிறதே தவிர வங்கி இருப்பதில்லை. ஜுவல்லரி இருக்கிறதே தவிர நகைக்கடை இல்லை. ஸ்டேஷனரி இருக்கிறதே தவிர எழுதுபொருளகம் இல்லை. எலக்ட்ரிக்கல்ஸ் எலக்ட்ரானிக்ஸ் ஹார்டுவேர் உண்டு. ஆனால், மின்பொருளகமும், வன்பொருளகமும் இல்லை. 

ஆப்டிகல்ஸ் உண்டு. கண் அணியகம் இல்லை. மெடிக்கல்கள் நிறைய உண்டு. மருந்தகங்கள்தான் இல்லை. ஹோல்சேல், ரீட்டைல், ரிப்பேர் சேல்ஸ் & சர்வீஸ் உண்டு. மொத்த சில்லரை விற்பனையகமோ, பழுது நீக்ககமோ எங்குமே காணக்கிடைப்பதில்லை. நீலக்கல் என்பதைக்கூட ப்ளூ ஸ்டோன் என்று தமிங்கலத்தில் எழுதுவதுதான் இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. தமிழ்நாட்டில் சாப்பாடு கிடைப்பதற்கு பதிலாக மீல்ஸ்தான் கிடைக்கின்றது. லெமன் சாதம் ரெடி என்று வடமொழியையும் ஆங்கிலத்தையும் கலந்து வணிக பெயர்ப்பலகைகளில் தமிழ்ப்படுகொலையே நடக்கிறது.

‘மணக்க வரும் தென்றலிலே, குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’ என்று பாவேந்தர் பாரதிதாசன் வருந்திப்பாடி 75 ஆண்டுகளை கடந்தும் இன்றளவும் அதே அவலநிலை நீடிக்கிறது.

இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்கள் செய்த அளப்பரிய ஈகங்களைத் தனதாக்கி, மொழிப்போர் மூலம் கிடைத்த முகவரியில் ஆட்சி அதிகாரத்தை அடைந்த திராவிட ஆட்சியாளர்கள் கடந்த 60 ஆண்டுகளில் தமிழ் மொழியை மெல்ல மெல்லச் சிதைத்து அழித்துவிட்டனர். தமிழ்நாட்டில் இன்றுவரை அன்னைத் தமிழ்மொழி வழிபாட்டு மொழியாகவோ, வழக்காட்டு மொழியாகவோ, பண்பாட்டு மொழியாகவோ, பயன்பாட்டு மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, அதிகார மொழியாகவோ இல்லாத கொடுஞ்சூழல் நிலவுவது தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த வரலாற்றுப் பெருந்துயராகும்.

தமிழர்கள் தங்கள் தாய்மொழியில் பெயர் வைத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா? என்று கேட்கின்ற இழிநிலை; தாழ்வு மனப்பான்மையால், தமிழர் தன் சொந்த நிலத்திலேயே வாழ்விழந்து, தன் மொழியின் உரிமையிழந்து தவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மாணவர்கள் முதல் அமைச்சர்கள்வரை தமிழில் பிழையின்றி எழுதப்படிக்க தெரியாமல் தடுமாறும்நிலை இருப்பது வெட்கக்கேடானது.

தமிழ்நாட்டுத் தெருக்களிலுள்ள பெயர்ப்பலகைகள் கூட தமிழில் இல்லை என்பதைவிட தமிழினத்திற்கு வேறென்ன இழிவு இருக்க முடியும்? கர்நாடக மாநிலத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் கன்னட மொழியிலேயே பெயர்ப்பலகை வைக்க வேண்டுமென அம்மாநில அரசு தனிச்சட்டம் இயற்றி அதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க நீதிமன்றம் உத்தரவிடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழில் பிறமொழிக் கலப்பின்றி எழுதும் வழக்கத்தைத் தொடங்கி, தலைமுறைகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் தமிழறிஞர் மறைமலை அடிகள் என்று, அவருடைய பிறந்தநாளில் புகழுரை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் விஜயே, தான் பேசும்போது வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் கலந்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளதுதான் பெருங்கொடுமை. பிறமொழி கலவாது மறைமலையடிகள் தலைமுறைகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்! ஆம், சரிதான். ஆனால் நீங்கள் எதற்கு வழிகாட்டியாக திகழ்கிறீர்கள் முதல்வர் அவர்களே? தமிங்கலம் பேசுவதற்கா?

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடுமொழியாக்க நீங்கள் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டுவந்தது வரவேற்கத்தக்கதுதான்! ஆனால், உங்கள் ஆட்சியில் தமிழ்த்தெருவில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க காலக்கெடு விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே? அதை எப்போது நிறைவேற்றப்போகிறீர்கள்? உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஒலிக்கத்தான் உச்சநீதிமன்றத்தின் அனுமதி தேவை. ஆனால், உங்களுடைய அரசு நினைத்தால் இப்போதே தமிழ்நாட்டிலுள்ள தெருக்களில் தமிழில் பெயர்பலகை வைக்க முடியும். தற்போது, உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ள நிலையில், உடனடியாக தமிழ்நாட்டு தெருக்களில் தமிழில் பெயர்பலகை வைப்பதை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.''என வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman requests the Tamil Nadu government to take steps to change the names of shops to Tamil


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->