நாங்க இனி சி.வி.சண்முகம் ரூட் தான்...! - அதிமுகவை விட்டு கொத்தாக வெளியேறிய 500 நிர்வாகிகள்...! - எகிறும் அரசியல் சூடு...!
We now CV Shanmugam root 500 executives who left AIADMK droves Rising political heat
சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் உருவான உள்கட்சி அதிருப்தி, தற்போது மீண்டும் வெளிப்படையாக வெடித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நீடித்து வரும் கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கட்சியில் இருந்து ஒரே நேரத்தில் விலக முடிவு செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக அதிருப்தி குரல் எழுப்பியதாக கூறப்பட்டது. அதன் பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டாலும், பின்னர் இரு தரப்பும் மீண்டும் இணைந்தன.

எனினும், சி.வி.சண்முகம் தனித்த அரசியல் அணுகுமுறையுடன் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.இந்தச் சூழலில், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து சி.வி.சண்முகத்தை மாற்றி, அந்தப் பொறுப்பை பசுபதியிடம் ஒப்படைத்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதன் பின்னர், விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும், மாவட்டச் செயலாளர் பசுபதி தலைமையில் மற்றொரு அணியும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன.இரு தரப்பினருக்கும் இடையிலான கருத்து மோதல் அவ்வப்போது வெளிப்பட்டு வரும் நிலையில், அண்மையில் நாட்டார்மங்கலத்தில் பசுபதி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் இரு அணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.இந்த பரபரப்பான சூழலில், சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் 11 முக்கிய நிர்வாகிகளை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, விழுப்புரம் மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்தி, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.முக்கிய நிர்வாகிகள் மீது தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.வில் அதிருப்தியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளனர். மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர், தங்களது விலகல் கடிதத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வழங்குவதற்காக பேருந்துகள் மற்றும் கார்கள் மூலம் சென்னைக்கு புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களில் சுமார் 300 பேர் தங்களது அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இந்த நிலையில், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமாக ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
ஆனால் தற்போதைய சூழலை முன்னிட்டு, 3 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 30 காவலர்கள் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக விலகும் முடிவை எடுத்திருப்பதால், அப்பகுதியில் அ.தி.மு.க.வின் அமைப்பு வலிமை பாதிக்கப்படக்கூடும் என்ற அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
English Summary
We now CV Shanmugam root 500 executives who left AIADMK droves Rising political heat