தண்ணீர் நம்மை இணைக்க வேண்டும்... பிரிக்கக்கூடாது...! - ஒத்துழைப்பை வலியுறுத்திய டி.கே.சிவக்குமார்...!
Water should connect us not divide us DK Sivakumar emphasized cooperation
31-வது தென் மாநில முதல்வர்கள் மாநாடு சென்னை அருகே மாமல்லபுரத்தை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் கர்நாடக துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் அருகருகே அமர்ந்துள்ளனர்.

மேலும், ஆந்திர முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா துணை முதல்-அமைச்சர் மல்லுப்பட்டி விக்ரமர்கா, கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், புதுச்சேரி மாநில ஆளுநர் கைலாஷ்நாதன், அந்தமான்-நிக்கோபர் தீவுகளின் துணைநிலை ஆளுநர், லட்சத்தீவு நிர்வாக அதிகாரிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டில் பேசிய கர்நாடக துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமார், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் விவகாரத்தில் முக்கிய கருத்துகளை முன்வைத்தார்.அவர் பேசுகையில், தண்ணீர் மாநிலங்களைப் பிரிப்பதற்கான காரணமாக இருக்கக் கூடாது; மாறாக, அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
நதிநீர் பங்கீடு என்ற அணுகுமுறையைக் கடந்து, நதிநீர் ஒத்துழைப்பு என்ற புதிய பாதையை நோக்கி நகர வேண்டிய காலகட்டம் இது என்றும் அவர் கூறினார்.நதிநீர் பிரச்சினைகளுக்கு மோதல் மற்றும் அரசியல் பார்வையில் தீர்வு காணாமல், பரஸ்பர ஒத்துழைப்புடன் அணுக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆறுகளுக்கு அரசியல் எல்லைகளோ, மாநில எல்லைகளோ தெரியாது என்று குறிப்பிட்ட டி.கே.சிவக்குமார், நீர்வளத்தை அனைத்து மாநிலங்களின் நலனையும் கருத்தில் கொண்டு பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்தார்.
கர்நாடகா எப்போதும் பிற மாநிலங்களின் உரிமைகளை மதித்து செயல்பட்டு வருவதாகவும், அதே நேரத்தில் கர்நாடகாவுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய நீர்ப்பங்கை உரிய முறையில் மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“நாங்கள் இங்கு புகார் தெரிவிக்க வரவில்லை. இந்தியாவின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக இணைந்து செயல்படவே வந்துள்ளோம். எங்களுக்கு தேவையானது நியாயமான அணுகுமுறை மட்டுமே” என்று அவர் தெரிவித்தார்.
சமத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவை கர்நாடகாவின் அடிப்படைக் கொள்கைகள் என்றும் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.மேகதாது அணை திட்டம் கர்நாடகாவுக்கு மட்டுமே பயனளிக்கும் திட்டம் அல்ல என்றும், தமிழகத்துக்கும் அதில் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
“கர்நாடகாவுக்கு உதவுங்கள்; உங்களுக்கு உதவ நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்ற வகையில் தனது கருத்தை முன்வைத்த அவர், நீர்வளத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இரு மாநில விவசாயிகளும் பயன்பெற முடியும் என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு துளி நீரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விவசாயிகளின் நலனுக்கும் பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
காவிரி உள்ளிட்ட நதிநீர் விவகாரங்கள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் கர்நாடக துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமார் முன்வைத்த இந்த கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
English Summary
Water should connect us not divide us DK Sivakumar emphasized cooperation