ராணுவத்தைக் கொண்டும் அடக்க முடியாது.! போலீசாரின் தாக்குதலுக்கு வைகோ கண்டனம்.! - Seithipunal
Seithipunal


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 62 நாட்களாக நியாயமான கோரிக்கைகளுக்காக வாட்டி வதைக்கும் உறைபனியில் அறப் போராட்டம் நடத்தி வருகின்றனர். உலகில் எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட போராட்டம் நடந்தது இல்லை.

கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிப்பதற்காக நரேந்திர மோடி அரசு, மூன்று விவசாயச் சட்டங்களைக் கொண்டுவந்தது. நாடெங்கும் கோடானுகோடி விவசாயிகள் இதனை எதிர்த்தனர். தான் என்கின்ற ஆணவமும், அகந்தையும், அதிகார போதையும் கொண்டு, சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்று நரேந்திர மோடி அரசு தான்தோன்றித்தனமாக நடந்து வருகின்றது.

உச்ச நீதிமன்றமே விவசாயிகளின் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, மத்திய அரசு தனது பிடிவாதப் போக்கைக் கைவிட வேண்டும் என்று கூறியது. விவசாயிகள் போராட்டத்தைத் தடை செய்ய முடியாது என்றும் அறிவித்தது.

மக்கள் கிளர்ச்சி புரட்சிப் பெருவெள்ளமாக மாறும். காவல்துறை, ராணுவத்தைக் கொண்டு அடக்க முடியாது. இரண்டு லட்சம் டிராக்டர்களில் டெல்லியில் விவசாயிகள் குவிந்துள்ளனர். 62 நாட்களாக துளியளவும் வன்முறைக்கு இடம் கொடுக்காமல், விவசாயிகள் அமைதி வழிப் போராட்டமே நடத்தினர். காவல்துறையே கலவரத்தை உண்டாக்கத் திட்டமிட்டது. இது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து காவல்துறை கடைப்பிடித்து வரும் நடைமுறையாகும்.

குடியரசு தினமான இன்று விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகைகுண்டுவீச்சை மத்திய அரசு நடத்தி இருக்கிறது. இந்த அடக்குமுறைக்குக் கண்டனம் தெரிவிக்கின்றேன். மக்கள் கிளர்ச்சி எரிமலையாக வெடிக்கும் என்பதை உணர்ந்து, மூன்று விவசாயச் சட்டங்களையும் மோடி அரசு ரத்து செய்ய வேண்டும்.

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடித்து, அடக்குமுறையின் மூலம் விவசாயிகளை ஒடுக்கிவிடலாம் என்று கருதினால் விபரீத முடிவே ஏற்படும். அதற்கு மத்திய அரசே முழுப் பொறுப்பு ஆகும்”. என்று வைகோ தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko statement jan 26


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->