ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு; சீனா மீது அமெரிக்கா அதிரடி நடவடிக்கை..!
US Takes Decisive Action Against China Over Allegations of Supplying Weapons to Iran
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே மும்முனையாக நடைபெற்ற போர், ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்த நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஈரானை பழிவாங்கு நடவடிக்கையாக வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அத்துடன், ஹார்முஸ் நீரிணையையும் முடக்கியது.
அமெரிக்கா மற்றும் ஈரானின் நீயா..? நானா..? என்ற போட்டியால் உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், கச்சா எண்ணெய் உள்ளிட்டவை விலையேறி வருகின்றன. இந்நிலையில், ஈரானுக்கு ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை பாகங்களைக் கொள்முதல் செய்ய உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 10 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.

அத்துடன், மத்திய கிழக்குப் போரின்போது ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இரண்டையும் ஒரேநேரத்தில் எதிர்கொண்டது. அப்போது ஈரானிய வெடிமருந்துகள் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க சொத்துகளை மட்டுமல்ல, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், பஹ்ரைன், சவுதி அரேபியா உள்ளிட்ட குறைந்தது 11 நாடுகளின் இலக்குகளையும் தாக்கின.
இதன் போது ஈரானிய இராணுவத்தின் முக்கிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டன. அத்துடன், அதன் துணைப் பிரிவுகள் தொடர்ந்து இலக்குகளைத் தாக்கின. ஈரானுக்கு அதன் நெருங்கிய நட்பு நாடான சீனா, உதவியதா எனக் கேள்விகள் எழுந்தன.
ஏனெனில், ஈரானின் இறையாண்மையைக் காக்கும் வகையில் அந்த நாட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனால் அத்தகைய ஆயுதக் களஞ்சியத்தை உருவாக்குவதில் சீனாவின் பங்கு அவ்வளவாக அறியப்படவில்லை என்ற தகவலும் வெளியான நிலையில், ஈரானின் ஆட்சியைத் தாங்கிப் பிடிக்க சீனா உதவுகிறது என அமெரிக்கா பரபரப்பு குற்றஞ்சாட்டியது.

இந்நிலையில், ஷாஹெட் ஆளில்லா விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் ஆயுத பாகங்கள் மற்றும் மூலப்பொருட்களை ஈரான் கொள்முதல் செய்ய உதவியதாகக் குற்றம்சாட்டி, சீனா மற்றும் ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட 10 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்க கருவூலம் தடை விதித்துள்ளது.
இதில் சீனாவைத் தளமாகக் கொண்ட யுஷிதா ஷாங்காய் இன்டர்நேஷனல் டிரேட் கோ லிமிடெட் மற்றும் துபாயைத் தளமாகக் கொண்ட எலைட் எனர்ஜி FZCO ஆகியவையும் அடங்கும். அத்துடன், ஈரான் நாட்டைச் சேர்ந்த பிஷ்காம் எலக்ட்ரானிக் சேஃப் கோ நிறுவனமும், சீனா நாட்டைச் சேர்ந்த ஹிடெக்ஸ் இன்சுலேஷன் நிங்போ கோ லிமிடெட் நிறுவனமும் தடை செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர, இன்னும் சில நிறுவனங்களும் இதில் அடக்கம் என்றும், ஈரானின் திறனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அத்துடன், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
US Takes Decisive Action Against China Over Allegations of Supplying Weapons to Iran