உத்தரப்பிரதேசம்: மொத்தம் 14,973 என்கவுண்டர்கள்..! குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை தொடரும்..!
UP Police encounter list
உத்தரப்பிரதேசத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், மாநில காவல்துறை ‘ஆபரேஷன் லங்கடா’ என்ற பெயரில் முக்கிய குற்றவாளிகளை பிடிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களில் நடந்த 20 மோதல்களில் 10 முக்கிய குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர்; பலர் காயமடைந்துள்ளனர்.
மோதல்களில் உயிரிழந்தவர்களில் ரூ.2.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட வினீத் பாண்டி, ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட இப்தகார், இம்ரான், அர்ஷத், நயீம் உள்ளிட்டோர் அடங்குவர்.
கவுசாம்பி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன் திருமணமான பெண் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் அவரது காதலன் பால்வீர், 48 மணி நேரத்திலேயே போலீஸின் துரத்தலில் காலில் சுடப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ராபர்ட்ஸ்கஞ்ச் பகுதியில் கடந்த 8ம் தேதி ஒரு பெண்ணை தாக்கி கொள்ளையடித்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக மூவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மறுநாள் அந்த மூவரும் என்கவுண்டரில் சுடப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அவுரையாவில் ரூ.25,000 வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த ராஜ்நேஷ் கைது செய்யப்பட்டார்; அவர்மீது பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. பரேலியில் ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட காஸ்கஞ்சைச் சேர்ந்த இப்தகார் கடந்த 8ம் தேதி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவரது மரணம் குற்றவாளிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சஹாரன்பூரில் துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட பிரசாந்த் குமார் தானாகவே காவல்நிலையம் வந்து சரணடைந்தார்.
கடந்த 8 ஆண்டுகளில் உத்தரப்பிரதேச காவல்துறை மொத்தம் 14,973 என்கவுண்டர்களை நடத்தியுள்ளது. இதில் 239 குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், பல நூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.