''தெருக்குரல்' அறிவு கைதுக்கு உதயநிதி கண்டனம்; 'நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்கள் ஒடுக்கப்படக் கூடாது' என பதிவு..!
Udhayanidhi condemns the arrest of Therukkural Arivu
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தகுதி தேர்வுகளில் குளறுபடி உள்ளிட்டவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் கடந்த 23 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறது.
இந்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று (20ஆம் தேதி), நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர். இதனை காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறையினர் தடுக்க முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இரு தரப்பிலும் தாக்குதல் சம்பவங்கள் நடந்தன.

இதில் இரு தரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியாக தமிழக்தில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று (21ஆம் தேதி), தமிழ்நாடு தலைமைச் செயலகம் முன்பாக ராப் பாடகர் அறிவு, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டார். இதனால், காவல்துறையினர் பாடகர் அறிவு உள்ளிட்ட 04 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பாடகர் அறிவு கைது செய்யப்பட்டமைக்குஎதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''நீட் (NEET) தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக, ராப் பாடகரும் எனது அன்புச் சகோதரருமான தெருக்கூரல்’ அறிவைக் கைது செய்த தமிழ்நாடு அரசை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரது குரல் தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் பிரதிபலிக்கிறது.
நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான பேரணிகளும் போராட்டங்களும் தீவிரமடைந்து வரும் வேளையில், அறிவைக் கைது செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாகத் தாங்களும் களமிறங்கத் திட்டமிட்டுள்ள தமிழக இளைஞர்களுக்கு, இது ஒரு கவலையளிக்கும் செய்தியை அளிக்கிறது.
நீட் தேர்வு முரண்பாடுகள் நிறைந்தது மட்டுமல்ல; அது ஒரு மிகப்பெரிய மோசடியாகவும் மாறியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்கள் ஒடுக்கப்படக் கூடாது; மாறாக, அவை செவிமடுக்கப்பட வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தெருக்குரல் அறிவு, முதலமைச்சர் விஜயை சந்திக்க அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Udhayanidhi condemns the arrest of Therukkural Arivu