சனாதான எதிர்ப்பு; சாமியார் மிரட்டல்! உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் திடீர் ரத்து! பரபரப்பில் அரசியல் களம்!
Udayanidhi all govt dmk programs are cancelled in viruthunagar
விருதுநகர் மாவட்டத்தில் உதயநிதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து!
தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அரசு துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நாளை நடைபெற இருந்தது. அந்தக் கூட்டத்தை தொடர்ந்து விருதுநகர் கல்லூரி சாலையில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபம் அருகே திமுக மூத்த உடன்பிறப்புகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் இல்லத்தின் அருகே உள்ள திடலில் மாவட்ட இளைஞரணி செயற்குழு கூட்டமும் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் அதிதீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சிக்காக கல்லூரி சாலையில் இரு புறங்களிலும் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணியை கடந்த ஐந்து நாட்களாக விருதுநகர் மாவட்ட திமுக உடன் பிறப்புகள் முழு வீச்சில் செய்து வந்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் திமுக சார்பில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது குறித்து திமுக உடன் பிறப்புகளிடம் கேட்டபோது மழை அறிவிப்பு காரணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாற்று தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் கூறி சமாளித்துள்ளனர்.

ஆனால் இதற்கு காரணம் சமீபத்தில் சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு இந்து அமைப்புகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் சூழலில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்ப்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் 10 கோடி ரூபாய் தருவேன் என அறிவித்ததற்கு பத்து ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே என் தலையை சீவிக் கொள்வேன் என உதயநிதி கிண்டல் அடித்த நிலையில் அந்த சாமியார் உதயநிதியின் தலைக்கான தொகையை உயர்த்தி வழங்குவதாக நேற்று அறிவித்தார். இவ்வாறு சூழ்நிலை சாதகமாக இல்லாத காரணத்தினால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் முனுமுனுக்கின்றன.
English Summary
Udayanidhi all govt dmk programs are cancelled in viruthunagar