தோற்ற இடத்தில் ‘விதை’ போட கிளம்பிய தவெக...! 8 மாவட்டங்களில் விஜய்யின் தளபதிகள் செய்யப்போகும் சீக்ரெட் களப்பணி என்ன...?
tvk who set out sow seeds place where he lost What secret field work that Vijay commanders 8 districts
கட்சி தொடங்கப்பட்டு வெறும் இரண்டு ஆண்டுகளிலேயே ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றிய த.வெ.க., தற்போது அடுத்த அரசியல் நகர்வுகளை தீவிரப்படுத்தி வருகிறது. தமிழக அரசியல் களத்தில் தங்களது செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பல்வேறு வியூகங்களை அக்கட்சி அமைதியாக வடிவமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த ஆதரவு எதிர்காலத்தில் நிரந்தர கூட்டணியாக மாறுமா என்ற அரசியல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு, ஆட்சியில் பங்கேற்குமாறு த.வெ.க. வெளிப்படையான அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த அழைப்பை ஏற்று அக்கட்சிகள் அமைச்சரவையில் இணைவதோடு, வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணியாக தொடரும் சூழல் உருவானால், தி.மு.க. தனது முக்கிய கூட்டணி கட்சிகளை இழக்கும் நிலை உருவாகலாம் என்ற அரசியல் கணிப்புகள் வலுத்து வருகின்றன.
ஏற்கனவே அ.தி.மு.க. உள்கட்டமைப்பில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு பெரிய கட்சிகளும் தங்களது தேர்தல் பின்னடைவை சரிசெய்ய முயற்சித்து வரும் தருணத்தில், த.வெ.க. மேற்கொண்டு வரும் அரசியல் நடவடிக்கைகள் தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, எதிர்க்கட்சிகளின் அரசியல் செல்வாக்கை குறைக்கும் நோக்கில், துரிதமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த த.வெ.க. அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான தொடக்கநிலை பணிகளும் அமைதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தனிப்பட்ட செயல் திட்டத்தை த.வெ.க. தீவிரமாக வடிவமைத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள், மதுக்கடைகள் மூடப்பட்ட விவகாரம், 200 யூனிட் இலவச மின்சாரம், முந்தைய ஆட்சிகளின் மக்கள் நலத்திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்துவது போன்ற அம்சங்கள் தங்களுக்கு சாதகமான அரசியல் சூழலை உருவாக்கும் என்று முதல்-அமைச்சர் விஜய் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளை முழுமையாக கைப்பற்றினால் மட்டுமே ஆட்சியை அடித்தளத்திலிருந்து வலுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில், அதற்கேற்ப கட்சி நிர்வாகிகளை தயார்படுத்தும் பணிகளில் முதல்-அமைச்சர் விஜய் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெறாத 8 மாவட்டங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ள கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விழுப்புரம், திருவாரூர், நீலகிரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கூடுதல் அரசியல் கவனம் செலுத்த த.வெ.க. முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாவட்டங்களில் இதுவரை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் த.வெ.க. வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
English Summary
tvk who set out sow seeds place where he lost What secret field work that Vijay commanders 8 districts