திமுக அரசின் பொங்கல் பரிசு நாடகம்... த.வெ.க கடும் கண்டனம்!
tvk pongal prize dmk govt mk stalin
தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக ஊடகப்பேரவை (ஐடி விங்க்) விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு 'பொங்கல் பரிசுத் தொகுப்பு' என்ற பெயரில் திமுக அரசின் தேர்தல் கால நாடகங்கள் அரங்கேறத் தொடங்கிவிட்டன. ஆட்சியில் அமர்ந்தது முதல் பொங்கல் பரிசாக வெறும் ₹1,000 மட்டுமே வழங்கி வந்த திமுக அரசு, தற்போது திடீரென ₹3,000 என அறிவித்திருப்பது மக்கள் நலனுக்காக அல்ல; இது அப்பட்டமான தேர்தல் கால அரசியல் நாடகம்!
தமிழகம் முழுவதும் கரும்புகள் விளைந்து அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், அவற்றைக் கொள்முதல் செய்வதற்கான முறையான நடவடிக்கைகளைத் திமுக அரசு இதுவரை எடுக்கவில்லை. கடந்த ஆண்டு கரும்பு கொள்முதலில் அரசு அதிகாரிகள் கமிஷன் கேட்டு ஊழல் செய்ததாகப் புகார்கள் எழுந்தன. அந்தத் கறையைத் துடைக்க எந்த முயற்சியும் எடுக்காத நிலையில், இந்த ஆண்டு கரும்புக்கான விலையைத் தீர்மானிக்காமல் தொகுப்பு அறிவிப்பை மட்டும் வெளியிட்டிருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்புகளின் தரம் குறித்து நாடு தழுவிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன. கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மளிகைப் பொருட்கள் தரமற்று இருந்ததையும், வெல்லம் உருகி ஓடிய அவலத்தையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை. பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் தரமற்றப் பொருட்களை விநியோகித்து, மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதுதான் திமுக அரசின் நிர்வாகத் திறமையா, முதல்வர் ஸ்டாலின் அவர்களே?
சமீபத்திய ₹3,000 அறிவிப்பு என்பது, மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கானத் திட்டமல்ல; மாறாக, வரப்போகும் சட்டமன்றத் தேர்தல் தோல்வி பயத்தில் மக்களை ஏமாற்றத் தீட்டிய திட்டம் மட்டுமே. ஒரு பக்கம் லஞ்ச ஊழல், அலட்சியம், நிர்வாகத் தோல்வி; மறுபக்கம் விவசாயிகளின் கண்ணீர் - இவை எதற்கும் தீர்வு காணாமல், வெறும் பணத்தை மட்டும் கொடுத்து மக்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என நினைப்பது எவ்வகையில் நியாயம் முதல்வரே? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
tvk pongal prize dmk govt mk stalin