புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்...! திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம்...!
Shocking Incident Puducherry Horrific Act Young Woman Set Ablaze After Refusing Marriage Proposal
புதுச்சேரி மாவட்டம் உப்பளம் நேதாஜி நகரைச் சேர்ந்த ரவி என்பவரின் மகள் சர்மிளா (27). அண்ணா சாலையில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்தார். இவருக்கும் இந்திரா நகரைச் சேர்ந்த டிரைவர் ஜோசப் (36) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
விவாகரத்து பெற்றவரான ஜோசப்பின் நடத்தை சர்மிளாவுக்கு பிடிக்காததால், அவர் அவருடன் பேசுவதை நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.ஆனால் சர்மிளாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற பிடிவாதத்தில் ஜோசப் தொடர்ந்து அவரை தொந்தரவு செய்து வந்தார்.

அவர் வேலை செய்யும் கடையில்கூட சென்று சண்டை போட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் சர்மிளா பெரியகட ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவலர்கள் ஜோசப்பை அழைத்து எச்சரித்து அனுப்பினர்.
இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடித்து வீட்டுக்கு நடந்து சென்ற சர்மிளாவை, ஒதியஞ்சாலை காவல் நிலையம் அருகே ஜோசப் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து மீண்டும் திருமணம் செய்ய வற்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்,சர்மிளா அதை பொருட்படுத்தாமல் சென்றதால் ஆத்திரமடைந்த ஜோசப், முன்கூட்டியே கொண்டு வந்திருந்த பெட்ரோலை அவரது மீது ஊற்றி தீ வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தீப்பற்றிய நிலையில் வலி தாங்க முடியாமல் சர்மிளா அலறியபடி ஓட, அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதில் கடுமையாக காயமடைந்த அவர் உடனடியாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் ஜோசப்பும் அவரது நண்பரும் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இருவரையும் கைது செய்த காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்,கையில் தீக்காயம் ஏற்பட்ட ஜோசப் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதுமட்டுமின்றி காவல் நிலையம் அருகே நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் புதுச்சேரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Shocking Incident Puducherry Horrific Act Young Woman Set Ablaze After Refusing Marriage Proposal