த.வெ.க. எம்.எல்.ஏ. பேச்சுக்கு கடும் எதிர்ப்பு... ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முதலமைச்சருக்கு அ.தி.மு.க. வலியுறுத்தல்...!
TVK MLA Strong opposition speech AIADMK Insistence Chief Minister Jallikattu issue
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் த.வெ.க. எம்.எல்.ஏ. கருப்பையா பேசியதற்கு முதல்-அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பான அரசின் நிலைப்பாட்டை சட்டசபையில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக அ.தி.மு.க. தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,"தமிழர்களின் பாரம்பரியத்தையும், வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு குறித்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டசபையில் இழிவாக பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.


உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சியையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.சங்க காலம் முதலே தமிழர்களுக்கும், காளைகளுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பை வெளிப்படுத்தி வரும் ஏறு தழுவுதல் குறித்து தொகுதி மக்களின் பிரதிநிதியாக இருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கு புரிதல் இல்லையா என்றும் அ.தி.மு.க. கேள்வி எழுப்பியுள்ளது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் விளைவாக, அன்றைய அ.தி.மு.க. அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி ஜல்லிக்கட்டுக்கான உரிமையை பெற்றுத்தந்ததாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஜல்லிக்கட்டு குறித்து சட்டசபையில் த.வெ.க. எம்.எல்.ஏ. பேசிய கருத்துகள் ஏன் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை என்றும் அ.தி.மு.க. கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை விதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு செயல்படுகிறதா? அதற்கான முன்னோட்டமாக தனது கட்சி எம்.எல்.ஏ. மூலம் கருத்துகளை தெரிவிக்க வைத்துள்ளதா? என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே எழுந்துள்ளதாகவும் அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.
எனவே, தனது கட்சி எம்.எல்.ஏ. தெரிவித்த கருத்துகளுக்கு முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு குறித்து தமிழக அரசின் தெளிவான நிலைப்பாட்டை சட்டசபையில் அறிவிக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
English Summary
TVK MLA Strong opposition speech AIADMK Insistence Chief Minister Jallikattu issue