45 நாள் தண்ணீர் போதாது... சம்பா சாகுபடிக்கு 150 நாள் நீர் தேவை...! - தமிழக அரசுக்கு சண்முகம் வலியுறுத்தல்
45 days water not enough 150 days water needed samba cultivation Shanmugam urges Tamil Nadu government
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து மேட்டூர் அணை நீர் திறப்பு, காவிரி நீர் பங்கீடு, பரந்தூர் மற்றும் ஓசூர் விமான நிலையத் திட்டங்கள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கருத்துகளை தெரிவித்தார்.அப்போது அவர் கூறியதாவது,"மேட்டூர் அணையில் இருந்து வருகிற 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

ஆனால், 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.45 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைத்தால் எந்தப் பயிரையும் முழுமையாக சாகுபடி செய்ய முடியாது. சம்பா நெல் சாகுபடியை முறையாக மேற்கொள்ள 120 முதல் 150 நாட்கள் வரை தொடர்ந்து நீர் கிடைக்க வேண்டும்.
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக உள்ள நிலையில், சம்பா சாகுபடி முழுமையாக நடைபெறுவதற்கான நீர் ஆதாரத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.45 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டால், நெல் சாகுபடியை தொடங்க முடியாத நிலை ஏற்படும். எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தேவையான காலம் முழுவதும் தண்ணீர் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய காவிரி நீரை முறையாக வழங்கவில்லை. அணைகள் நிரம்பும் நேரங்களில் மட்டும் உபரி நீரை திறந்துவிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் நிலை தொடர்கிறது.எனவே, தமிழக அரசு உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசிடமும் உரிய அழுத்தத்தை ஏற்படுத்தி, தமிழகத்திற்கான காவிரி நீரை மாதந்தோறும் முறையாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் மற்றும் ஓசூர் விமான நிலையம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சண்முகம், முப்போகம் விளையும் விவசாய நிலங்களை எந்தவொரு மாற்றுத் திட்டத்திற்காகவும் கையகப்படுத்தக் கூடாது என்றார்.தமிழகத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் தரிசு நிலங்கள் இருப்பதாகவும், விவசாயத்திற்கு பயன்படாத அந்த நிலங்களை கண்டறிந்து அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விவசாய நிலங்களை கையகப்படுத்துவோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல. அவரது கருத்து விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் சண்முகம் தெரிவித்தார்.கல்லூரிகளில் இடதுசாரி மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களை கண்காணிக்க வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தலைமைச் செயலாளரே முழுப் பொறுப்பு என சண்முகம் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தாங்கள் அனுப்பிய கடிதத்தின் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க உள்ளதாகவும் சண்முகம் கூறினார்.
English Summary
45 days water not enough 150 days water needed samba cultivation Shanmugam urges Tamil Nadu government