பத்திரிகையாளர்களை அசிங்கப்படுத்திய தவெக! கரூர் விழா அரங்கிலிருந்து செய்தியாளர்கள் வெளியேற்றம்! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கரூரில் நடைபெற்று வரும் அரசு விழாவில் செய்தி சேகரிப்பதற்காக வந்திருந்த செய்தியாளர்கள் திடீரென விழா அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முறையான அனுமதி மற்றும் பாஸ் பெற்றே விழாவுக்கு வந்ததாக தெரிவித்த செய்தியாளர்கள், காவல்துறையினரின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கரூரில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் அரசு விழாவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியை செய்தி சேகரிப்பதற்காக பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி உரிய பாஸ் பெற்று விழா அரங்கிற்கு வந்த செய்தியாளர்கள், ஆரம்பத்தில் செய்தி சேகரிப்பதற்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு காவல்துறையினர் அவர்களை திடீரென விழா அரங்கிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த செய்தியாளர்கள், மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றுத்தான் வந்துள்ளோம் என்றும், அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட பாஸ் வைத்திருக்கும் நிலையில் எதற்காக தங்களை வெளியேற்றுகிறீர்கள் என்றும் காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினர்.

ஆனால் விழா அரங்கிற்குள் மட்டுமின்றி, வெளியே கூட செய்தியாளர்கள் நிற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் செய்தியாளர்கள் தங்களது பாஸ்களை காட்டி முறையிட்டனர்.

“எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் இந்த பாஸ்களை எதற்காக கொடுத்தீர்கள்? மாவட்ட ஆட்சியர் வழங்கிய பாஸுக்கு மதிப்பு இல்லையா? நாங்கள் இதற்கு முன்பு முதலமைச்சரை பார்த்ததே இல்லையா? எதற்காக திடீரென இவ்வளவு கெடுபிடி காட்டப்படுகிறது?” என செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, காவல்துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கூறிவிட்டு அங்கிருந்து சென்றதாக தெரிகிறது. ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் அங்கு வரவில்லை என செய்தியாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதற்கிடையே செய்தியாளர்கள் விழா அரங்கிற்கு செல்ல பயன்படுத்திய பாதையும் தகர தடுப்புகளை கொண்டு முழுமையாக அடைக்கப்பட்டது. செய்தியாளர்கள் மீண்டும் அந்த பகுதிக்குள் நுழைய முடியாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பை மேலும் தீவிரப்படுத்தியதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் விஜய்யின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக செய்தியாளர்கள் இருக்கும் பகுதியில் இருந்து முதலமைச்சரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக திடீரென தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் முறையான அனுமதி பெற்று, அடையாள அட்டைகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் வழங்கிய பாஸ்களுடன் வந்த செய்தியாளர்களை திடீரென வெளியேற்றியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிலும் விழா அரங்கிற்கு வெளியே கூட நிற்க அனுமதி மறுக்கப்பட்டதுடன், செய்தியாளர்கள் பயன்படுத்திய பாதையை தகரத்தால் முழுமையாக அடைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியம் என்றாலும், அரசு விழாவை செய்தி சேகரிக்க அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்ட செய்தியாளர்களை திடீரென வெளியேற்றியது ஏன் என்றும், பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக முன்கூட்டியே ஆய்வு செய்யப்படவில்லையா என்றும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

கரூர் அரசு விழாவில் செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்துடன் ஏற்பட்ட வாக்குவாதமும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK humiliates journalists Reporters evicted from the event venue in Karur What happened


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->