செயற்கை கருத்தரிப்பு மையங்களில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி...? மத்திய அரசு கொண்டு வந்த புதிய கிடுக்கிப்பிடி விதிகள்...!
end to irregularities artificial insemination centers New restrictive rules brought by central government
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் உரிமம் பெறாத செயற்கை கருத்தரிப்பு மையங்களின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், மத்திய அரசு முக்கிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இனி அரசு அங்கீகாரம் பெற்ற மையங்களுக்கு மட்டுமே அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐ.வி.எப். (செயற்கை கருத்தரிப்பு) மற்றும் உதவி இனப்பெருக்க சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தேசிய ஆர்ட் மற்றும் வாடகைத்தாய் பதிவகத்தின் தரவுகளின்படி, மொத்தம் 7 ஆயிரத்து 803 மையங்கள் பதிவு பெற விண்ணப்பித்துள்ள நிலையில், அவற்றில் 4 ஆயிரத்து 268 மையங்களுக்கு மட்டுமே இதுவரை அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அண்மைக் காலமாக உரிமம் பெறாத கருத்தரிப்பு மையங்கள் செயல்படுவது, மருத்துவ விதிமுறைகள் மீறப்படுவது மற்றும் கருவுறுப்பு மாற்றம் தொடர்பான முறைகேடுகள் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்தத் துறையை ஒழுங்குபடுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.இதன் ஒரு பகுதியாக, மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஐ.வி.எப். மற்றும் உதவி இனப்பெருக்க சிகிச்சை மையங்களில் பயன்படுத்தப்படும் ஆய்வகப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய சிகிச்சைப் பொருட்கள் அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்று பதிவு செய்யப்பட்ட மையங்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களும், விநியோகஸ்தர்களும், பொருட்கள் அனுப்பப்படும் கருத்தரிப்பு மையம் அரசிடம் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கட்டாயமாக உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, செயற்கை கருத்தரிப்புக்கு அவசியமான விந்தணு, கருமுட்டை, கருவளர்ப்பு ஊடகங்கள், சிறப்பு ரசாயனங்கள் மற்றும் ஆய்வகப் பயன்பாட்டு அத்தியாவசியப் பொருட்கள் இனி அங்கீகாரம் பெறாத மையங்களுக்கு வழங்கப்படாது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததன் மூலம், சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் போலி கருத்தரிப்பு மையங்கள் மருத்துவப் பொருட்களை பெற முடியாத நிலை உருவாகும். இதன் மூலம் தரமற்ற சிகிச்சைகள் கட்டுப்படுத்தப்படுவதோடு, குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்து சிகிச்சை பெறும் தம்பதியர் ஏமாற்றப்படுவதையும் தடுக்கும் நடவடிக்கையாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
end to irregularities artificial insemination centers New restrictive rules brought by central government