பேனர்களை உடனடியாக அகற்றுங்கள்: தவெக தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அவசர உத்தரவு!
TVK General Secretary Orders Immediate Removal of Banners and Cutouts
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் நேரடி உத்தரவின்படி, கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தொண்டர்களுக்கு முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பேனர் மற்றும் கட்-அவுட் கலாச்சாரத்திற்குத் தவெக முற்றிலும் எதிரானது என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கழகத் தலைவர் விஜய் எப்போதும் பொதுமக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்றும், மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுவதை அவர் விரும்புவதில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சாலை ஓரங்களில் பேனர்கள் வைக்கக்கூடாது எனப் பலமுறை அறிவுறுத்தியும், தடையை மீறி கட்-அவுட்டுகள் வைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, அண்மையில் தவெக தலைவர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களின் போக்குவரத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் இத்தகைய செயல்களைத் தவெக தலைமை ஒருபோதும் ஏற்காது. எனவே, சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பேனர்கள் மற்றும் கட்-அவுட்களை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனடியாகத் தங்களின் சொந்தப் பொறுப்பில் அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் கட்சியின் எந்தவொரு நிகழ்விலும் இத்தகைய விளம்பரக் கலாச்சாரத்தில் தவெகவினர் யாரும் ஈடுபடக் கூடாது என்றும், இந்த உத்தரவை அனைத்துத் தொண்டர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தனது அறிக்கையில் மிகவும் உறுதியாக வலியுறுத்தியுள்ளார்.
English Summary
TVK General Secretary Orders Immediate Removal of Banners and Cutouts