தவெக செயல்வீரர்கள் மாநாடு: விஜய் எடுக்கும் தேர்தல் முடிவு!தவெக அணியாக வருமா? தனியாக வருமா? - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில மற்றும் மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் இன்று சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் க்யூஆர் குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தவெக பல்வேறு அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 20ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் தேர்தல் அறிக்கை குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேர்தல் பரப்புரைக் குழுவின் ஆலோசனையும் நடந்தது. இந்த தொடர் கூட்டங்களின் அடுத்த கட்டமாகவே, இன்று நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

இதற்கிடையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கான தணிக்கைச் சான்று விவகாரம் மற்றும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை போன்ற தொடர் நெருக்கடிகளை விஜய் சந்தித்து வருகிறார். இந்த பின்னணியில் நடைபெறும் இன்றைய கூட்டம், தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தேர்தலுக்கு நாட்கள் குறைந்து வரும் நிலையில், தவெக தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணியுடன் களம் இறங்குமா என்ற கேள்விக்கு இன்று விடை கிடைக்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. டிடிவி தினகரன் அதிமுக–பாஜக கூட்டணிக்கு சென்றுள்ளதும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திமுக பக்கம் நகர்ந்துள்ளதும், இதுவரை எந்த பெரிய கட்சியும் விஜய் பக்கம் வராத சூழலை உருவாக்கியுள்ளது. மேலும், விஜயகாந்தின் தேமுதிகவும் திமுக மற்றும் அதிமுக–பாஜக கூட்டணிகளுடனே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்ற அறிவிப்பை முன்வைத்தாலும், அதற்கான அரசியல் ஆதரவு இதுவரை திரளாத நிலையில், விஜய் எடுக்கும் அடுத்த கட்ட முடிவு என்ன? என்ற கேள்விக்கு இன்றைய மாமல்லபுரம் கூட்டம் முக்கிய பதிலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tvk activistsconference Vijay election decisionWill Thaveka come as a team Will he come alone


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->