சிபிஎம் வேட்பாளராக போட்டி?சிரிப்புதான் வருது.. எல்லாமே பொய்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பாவனா!
Contesting as a CPM candidate All I can say is that it's a lie Bhavana put an end to the rumors
வரவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் வேட்பாளராக நடிகை பாவனா போட்டியிட உள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களுக்கு அவர் தெளிவான மறுப்பு தெரிவித்துள்ளார். சில ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனது புதிய திரைப்படமான ‘அனோமி’ வெளியீட்டை முன்னிட்டு அளித்த பேட்டியில் பாவனா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள பாவனா, மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்த அவர், கடைசியாக அஜித்துடன் அசல் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது பாவனா கதாநாயகியாக நடித்துள்ளதுடன், இணைத் தயாரிப்பாளராகவும் இருக்கும் ‘அனோமி’ திரைப்படம் ஜனவரி 30ஆம் தேதி வெளியாக உள்ளது. அறிமுக இயக்குநர் ஆர். மரத் எழுதி இயக்கியுள்ள இந்த மர்ம–த்ரில்லர் படத்தில், பாவனா தடயவியல் ஆய்வாளர் சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது அவரது திரையுலக வாழ்க்கையின் 90வது படமாகும். இப்படத்தில் ரஹ்மான், பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா, அர்ஜுன் லால், ஷெபின் பென்சன் மற்றும் த்ரிஷ்யா ரகுநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாவனா, “நான் கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. இப்படி ஒரு செய்தி எப்படி வெளியானது என்பதே எனக்குத் தெரியவில்லை. இதில் துளியும் உண்மை இல்லை. அந்தச் செய்தியைப் பார்த்தபோது எனக்குச் சிரிப்புதான் வந்தது. அது ஒரு பெரிய நகைச்சுவை” என்று கூறினார்.
அரசியலில் நேரடியாக ஈடுபடப் போவதாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். குறிப்பிடத்தக்க வகையில், நடிகை பாவனா கடந்த 2013ஆம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
English Summary
Contesting as a CPM candidate All I can say is that it's a lie Bhavana put an end to the rumors