அட்லீ, லோகேஷ் வரிசையில் நெல்சனும்… ஜூனியர் என்.டி.ஆருடன் பான் இந்தியா படம்? வெளியான அப்டேட்...!
Nelson joins Atlee and Lokesh in the line up A Pan India film with Jr NTR Update released
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாக வலம் வந்த அட்லீ, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் பான் இந்தியா படங்களை இயக்க கமிட்டாகியுள்ள நிலையில், தற்போது அந்த பட்டியலில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன், அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். டாக்டர் வெளியீட்டுக்கு முன்பே விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவான முதல் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தாலும், பீஸ்ட் படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களும், ட்ரோல்களும் எழுந்தன.
இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகி பான் இந்தியா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. ரஜினியின் மாஸ் நடிப்பு மட்டுமின்றி, மோகன்லால், ஷிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரின் கேமியோ காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.
ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் – ரஜினிகாந்த் கூட்டணி மீண்டும் இணைந்து ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறது. முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தப் படத்தில், ரஜினிகாந்துடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், எஸ்.ஜே.சூர்யா, மோகன்லால், ஷிவராஜ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைக்கும் இந்த படம், இந்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இதற்கிடையே, நெல்சன் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, நெல்சன் அடுத்ததாக ஒரு பான் இந்தியா படத்தை இயக்க உள்ளதாகவும், அதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜெயிலர் 2 வெளியீட்டுக்குப் பிறகு இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அட்லீ, லோகேஷ் கனகராஜ் போன்ற தமிழ் இயக்குநர்கள் தெலுங்கு நட்சத்திரங்களை வைத்து பான் இந்தியா படங்களை இயக்க கமிட்டாகியுள்ள நிலையில், நெல்சன் – ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணி உறுதியானால், தமிழ் இயக்குநர்களின் பான் இந்தியா பயணம் இன்னும் ஒரு படி முன்னேறும் என சினிமா ரசிகர்கள் உற்சாகமாக எதிர்பார்க்கின்றனர்.
English Summary
Nelson joins Atlee and Lokesh in the line up A Pan India film with Jr NTR Update released