'தூத்துக்குடி 'எச்டி ஹூண்டாய்' கப்பல் கட்டும் திட்டத்தை கைப்பற்ற ஆந்திரா முயற்சி: தமிழக அரசு விழித்துக்கொள்ளவில்லை'; டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு..!
TRB Raja alleges that Andhra Pradesh is trying to seize the Thoothukudi HD Hyundai shipyard project
''தூத்துக்குடியில் அமையவுள்ள எச்டி ஹூண்டாய் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தைக் கைப்பற்ற, ஆந்திர அரசு இப்போது தீவிர முயற்சி செய்து வருகிறது. ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் தென் கொரியா சென்று காக்கினாடா மற்றும் ஆந்திராவை முன்வைத்துப் இத்திட்டத்தை கொண்டு செல்வது குறித்து பேசியுள்ளார். தமிழக அரசு விழித்துக் கொள்ளவில்லை.'' என முன்னாள் திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''திமுக ஆட்சிக் காலத்தில் மிகுந்த முயற்சியுடன் உறுதி செய்யப்பட்ட 4 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பிலான எச்டி ஹூண்டாய் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தைக் கைப்பற்ற, ஆந்திர அரசு இப்போது தீவிர முயற்சி செய்து வருகிறது. 2.5 மில்லியன் ஜி.டி திறன் மற்றும் 15 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்புகள் என்ற நிலைக்கு இத்திட்டம் முன்னேறியுள்ளது.
தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை முடிவடைந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பில் உள்ளது. மேலும் தேசிய கப்பல் கட்டும் மிஷன், இத்திட்டத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் முன்மொழியப்பட்ட ஐந்து கப்பல் கட்டும் மையங்களில் தூத்துக்குடியே மிகவும் முன்னேறியது என்று மத்திய அரசே கூறுகிறது.
ஆனாலும் இத்திட்டத்தை ஆந்திரா கொண்டு செல்லும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் தென் கொரியா சென்று காக்கினாடா மற்றும் ஆந்திராவை முன்வைத்துப் இத்திட்டத்தை கொண்டு செல்வது குறித்து பேசியுள்ளார். ‘எச்டி ஹூண்டாய்’ கப்பல் கட்டும் தளம் திட்டத்துக்கு கூடுதல் சலுகைகளை வழங்குவதாக ஆந்திர அரசு கூறுகிறது.
அதிர்ஷ்டவசமாக, ஏற்கனவே தமிழகத்தைத் தேர்ந்தெடுத்த முதலீட்டாளரைப் பறிக்க நடக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசு அதிகாரிகளே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழகத்துக்காக பெற்ற முதலீட்டைப் பாதுகாக்க டெல்லியே விழிப்புடன் இருக்கும்போது, இங்குள்ள தவெக அரசு நிச்சயம் வேகத்தை காட்ட வேண்டும்.
எச்டி ஹூண்டாயை தமிழகத்துக்குக் கொண்டுவர திமுக மிக மிகக் கடுமையாக உழைத்தது. யாரோ ஒருவர் அதைப் பிடுங்கப் பார்க்கும்போது தற்போதைய அரசு தூங்கி வழியக் கூடாது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் புத்தி கூர்மையையும், அமைச்சர் நாரா லோகேஷின் துரிதமான வேலையையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர்கள் சலிப்பின்றி உழைப்பவர்கள், டெல்லிக்கும் மிக நெருக்கமானவர்கள்.'' என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
TRB Raja alleges that Andhra Pradesh is trying to seize the Thoothukudi HD Hyundai shipyard project