தன் அமைச்சரின் இந்த செயலுக்கு முதலமைச்சராக ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் - பாஜக காட்டம்!
TN BJP narayanan condemn to DMK MK Stalin
பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வீடுத்துள்ள அறிக்கையில், "துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சிவகங்கை மாவட்டத்தில் திமுக சார்பில் நடைபெற்ற விழா ஒன்றின் மேடையில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிக்கொண்டிருந்த பெண்களை, தமிழக அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள், தான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வரவழைத்து நடனமாட செய்து மகிழ்ந்த காணொளி சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் பரவி வருகிறது.
மூத்த அமைச்சர் என்று அழைக்கப்படும் பெரியகருப்பனின் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது. தன்னை எல்லோரும் 'அப்பா' என்று அழைக்கிறார்கள் என்று பெருமைப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த காணொளியை பார்த்திருந்தாலும், பார்க்காமல் இருந்தாலும், அந்த கட்சியினுடைய தலைவராக, தமிழகத்தின் முதலமைச்சராக தன் அமைச்சரின் இந்த செயலுக்கு வெட்கப்பட வேண்டும்.
மாறாக இது தான் திராவிட மாடல் என்று சொல்வாரேயானால் தமிழகத்தின் தலைகுனிவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு தனிநபரின் செயலுக்கு முதல்வர் எப்படி பொறுப்பேற்பது என்று யாரேனும் கேட்பார்களேயானால், அதற்கு என் பதில், பொதுவெளியில் தன் அமைச்சரின் முறையற்ற செயலுக்கு, முதலமைச்சராக தார்மீக பொறுப்பேற்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது என்பதேயாகும். மேலும், சில வருடங்களுக்கு முன் இதை விட அருவெறுக்கத்தக்க செயல் ஒன்றில் அவர் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அவரை அமைச்சராக்கி அழகு பார்த்துள்ள திராவிட மாடல் திமுக, இந்த விவகாரத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளுமா என்பது சந்தேகமே.
ஒவ்வொரு தனிமனிதனின் அந்தரங்கத்திற்குள் நுழைய யாருக்கும் அதிகாரமோ, உரிமையோ இல்லையென்றாலும், பொது வெளியில் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டியது அதிகாரத்தில் உள்ளவர்களின் கடமை. யாராக இருந்தாலும், பொதுவெளியில் ஒழுக்கத்தை கடைபிடிக்காமல், தன் பதவியின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது குற்றமே. வெட்கங்கெட்ட, தரம்கெட்ட, மலிவான, அருவெறுக்கத்தக்க, பெண்களை காட்சிப்பொருளாக நினைக்கும் இந்நபர்களை ஊக்குவிப்பது சமுதாய சீர்கேட்டை மேலும் அதிகரிக்கும். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சிந்திப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
TN BJP narayanan condemn to DMK MK Stalin