பள்ளிக்குள் பாதுகாப்பு இல்லையா...? சுவர் இடிந்து மாணவன் உயிரிழந்த சோகம் பரபரப்பு...!
there no security inside school tragedy student death after wall collapsed sensation
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமாரின் மகன் மோகித் (12), அதே கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
அரையாண்டுத் தேர்வு நடந்து வந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மோகித், தேர்வு எழுதி முடிந்ததும் பள்ளி வளாகத்தில் உள்ள நடைபாதை கைப்பிடி சுவர் அருகே அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அச்சமயம் எதிர்பாராத விதமாக அந்த கைப்பிடி சுவர் திடீரென இடிந்து விழுந்து மோகித்தின் மீது மோதியது. இதில் தலையில் கடுமையான காயம் அடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
இந்த துயரச் செய்தி அறிந்ததும் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பள்ளிக்கு திரண்டு வந்து, மாணவனின் உடலை வாங்க மறுத்து நீதியைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலின் பேரில் ஆர்.கே. பேட்டை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதற்கிடையே, உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த விபத்தில் அலட்சியம் காட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
English Summary
there no security inside school tragedy student death after wall collapsed sensation