ஏழைகளின் உயிர்காக்கும் திட்டத்தை சிதைக்கும் பாஜக...! - மதிமுக தலைவர் வைகோ தாக்கு
BJP destroy life saving plan poor MDMK leader Vaiko attacks
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை திட்டமிட்டு சிதைக்கும் முயற்சியில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஈடுபட்டு வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய MNREGA திட்டத்தின் அடிப்படை நோக்கத்தை மாற்றி, புதிய பெயரில் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது மக்கள் விரோத செயலாகும் என தெரிவித்துள்ளார்.

2005-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் கிராமப்புற துயரங்களுக்கு நிரந்தர தீர்வாக இருந்ததாக வைகோ நினைவூட்டினார். ஆனால் 2014க்குப் பிறகு பாஜக ஆட்சியில் இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் குறைக்கப்பட்டு, 100 நாள் வேலை உறுதி இன்று சராசரியாக 40 நாட்களாக சுருங்கி விட்டதாக குற்றம்சாட்டினார்.
மேலும் ஆதார் இணைப்பு காரணமாக இலட்சக்கணக்கான ஏழைகள் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதுடன், பாஜக ஆளாத மாநிலங்கள் நிதி ஒதுக்கீட்டில் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், MNREGA என்ற பெயரை மாற்றி ‘விக்ஷித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர்’ என புதிய பெயரில் மசோதா கொண்டு வரப்பட்டிருப்பது, தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பெயரை திட்டமிட்டு நீக்கும் செயல் என்றும், இது கடும் கண்டனத்துக்குரியது என்றும் வைகோ கூறினார்.
உலகப்புகழ் பெற்ற பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் பாராட்டிய இந்தத் திட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது கோடிக்கணக்கான ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் துரோகச் செயல் என விமர்சித்த வைகோ, இந்த மக்கள் விரோத அரசுக்கு உரிய பாடத்தை தமிழ்நாட்டு மக்கள் தேர்தலில் கற்பிப்பார்கள் என எச்சரித்துள்ளார்.
English Summary
BJP destroy life saving plan poor MDMK leader Vaiko attacks