திருமாவளவனை அழைத்த வானதி.. "தற்காலிகமாக கூட கிடையாது".. விசிக - பாஜகவின் தடாலடி அரசியல்..!!
Thirumavalavan responds to Vanathi comment on DMK alliance
கோயம்புத்தூரில் செய்தியாளர்கள் சந்தித்த வானதி சீனிவாசனிடம் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற முடிவை கருத்தில் கொண்டு பாஜகவை சுமக்கும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என திருமாவளவன் கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் "திருமாவளவன் அவர்கள் திமுக கூட்டணியில் இருப்பதன் மூலமாக அவர் நினைக்கும் சமூக நீதி அல்லது அவர் சார்ந்த பட்டியலின சமூக மக்களுக்கு எதுவும் நடக்காது என்பதை கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் எந்த ஒரு பட்டியலின மக்களின் பிரச்சினைகளுக்கும் இந்த அரசாங்கத்தில் இருந்து தீர்வு காண முடியவில்லை. எதற்காக அவர் அங்கு இருக்கிறார். எனவே சகோதரர் திருமாவளவன் திமுகவின் சமூக நீதிக்கு எதிரான கூட்டணியை விட்டு விலகி பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக்கு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என பதில் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் பாஜக கூட்டணிக்கு வானதி சீனிவாசன் அழைத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "திமுக கூட்டணியை உடைக்க பாஜக திட்டமிடுகிறது. திமுகவையும் விசிகவையும் பிரிக்க இளவுகாத்த கிளி போல் பாஜக காத்துக் கொண்டிருக்கிறது. பாஜகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் தற்காலிகமாக கூட கூட்டணி வைக்காது" என செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலடி அளித்துள்ளார்.
English Summary
Thirumavalavan responds to Vanathi comment on DMK alliance