2026 தேர்தலை தீர்மானிக்கும் முழக்கம் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ – ஆதவ் அர்ஜுனா பரபர பதிவு - Seithipunal
Seithipunal


2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தை தீர்மானிக்கும் முக்கிய முழக்கமாக, ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற சுயமரியாதை கோரிக்கை உருவெடுத்துள்ளதாக தமிழக வெற்றிக் கழக (தவெக) தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இந்த நியாயமான முழக்கத்தை எழுப்புபவர்களை வழக்கம்போல் ஆர்.எஸ்.எஸ் அல்லது பாஜக என முத்திரை குத்தி திமுக தப்பித்து விட முடியாது என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விஷயங்களில் தீவிரமாக பேசத் தொடங்கியுள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள், ஆட்சியில் அதிகாரப் பகிர்வு வேண்டும் என தொடர்ந்து பேசுவது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதே நேரத்தில், தவெக தலைவர் விஜய், கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படும் என வெளிப்படையாக அறிவித்திருந்தது அரசியல் களத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

இந்த பின்னணியில், ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில், தமிழக அரசியல் சூழலை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், இன்றைய நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் தனித்து 40 சதவீத வாக்குகளைப் பெறும் நிலையில் இல்லை என்றும், கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கிகளை பயன்படுத்தி தான் இதுவரை ஆட்சியைக் கைப்பற்றி வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலை இனி தொடராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளை பயன்படுத்தி அதிகாரம் பெற்றுவிட்டு, பின்னர் அவர்களுக்கு எந்த அதிகாரப் பங்கும் வழங்காமல் ஒதுக்கிவிடும் அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது என ஆதவ் அர்ஜுனா சாடியுள்ளார். ஒரே குடும்பம், ஒரே கட்சி என்ற அதிகார மமதையில் கூட்டணிக் கட்சிகளை அடிமை சாசனம் எழுதச் சொல்லும் போக்கு திமுக தலைமையின் பண்ணையார் மனநிலையை காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், 2024 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, “கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை” என்று திமுக தலைமையே ஒப்புக்கொண்டதை நினைவூட்டிய அவர், அப்போது நாடாளுமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் சட்டமன்றத் தொகுதிகள் கணக்கிடப்பட்டு கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார். ஆனால் சட்டமன்றத் தேர்தல் வரும் போது மட்டும் அந்த கணக்கு ஏன் மறுக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இனி தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு இல்லாமல் ஆட்சியை அடைய முடியாது என்றும், ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கம் இன்று அனைத்து கட்சித் தொண்டர்களின் குரலாகவும், மக்களின் குரலாகவும் மாறிவிட்டதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஆட்சிய அதிகாரத்திற்கு வர வேண்டிய காலம் கனிந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த கோரிக்கையை முன்வைப்பவர்களை வழக்கம்போல் ஆர்.எஸ்.எஸ் அல்லது பாஜக என முத்திரை குத்தி திமுக தப்பிக்க முடியாது என்றும், கடந்த 2024 தேர்தலில் போட்டியிட்ட 22 தொகுதிகளில் ஒரு இஸ்லாமிய வேட்பாளரைக் கூட திமுக முன்னிறுத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டி, சிறுபான்மையினர் பாதுகாவலன் என்ற முகமூடியையும் திமுக இனி பயன்படுத்த முடியாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மொத்தத்தில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கமே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய அரசியல் கோஷமாக மாறும் என்று ஆதவ் அர்ஜுனா தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The slogan that will decide the 2026 elections is Share in governance share in power Adhav Arjuna Parapara Post


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->