கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ள முதலமைச்சர்: உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி; காயமடைந்தவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்..!
The Chief Minister has personally visited the Karur Government Hospital
நேற்று கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், இதனால் பாலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். அதன் பின்னர் அமைச்சர்களான மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரையும் அங்கு செல்ல உத்தரவிட்டார்.

பின்னர், உளவுத்துறை ஐ.ஜி.டேவிட்சன் தேவாசிர்வாதத்தை தொடர்பு கொண்டு சம்பவ நிலவரங்களை கேட்டறிந்து கொண்டார். அவரையும் முதலமைச்சர் உடனே கரூர் செல்லுமாறு உத்தரவிட்டார். மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலுவை தொடர்பு கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீட்புப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் பணிகளை முன்னின்று கவனிக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
அதுத, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல் ஆகிய 03 மாவட்ட ஆட்சியர்களையும் தொடர்பு கொண்டு, அவர்கள் அனைவரும் உடனடியாக கரூருக்கு செல்ல வேண்டும் என்றும், அங்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அத்துடன், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பின்னர், மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் நேற்று இரவே சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் சென்றடைந்துள்ளார். அங்கிருந்து, சாலை மார்க்கமாக காரில் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். கொட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு, மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
The Chief Minister has personally visited the Karur Government Hospital