வாக்காளர் பட்டியல் பரபரப்பு: தேர்தல் ஆணையத்துக்கு 2 நாள் ‘டெட்லைன்’ உச்சநீதிமன்றம்...!
Voter list controversy Supreme Court gives Election Commission 2 day deadline
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) மேற்கொண்டு வருகிறது. ஆனால் மேற்கு வங்கத்தில் நடைபெறும் இந்த நடவடிக்கை அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த செயல்முறைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன. முரண்பாடு என்ற பெயரில் நோட்டீஸ் அனுப்பி, மக்களை நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வைக்கிறார்கள்,” என அவர் குற்றம்சாட்டினார். மேலும், இந்த நடைமுறையால் பலர் பாதிக்கப்பட்டதோடு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பாதிக்கப்பட்ட வாக்காளர்களின் பிரதிநிதிகளுடன் டெல்லி சென்ற மம்தா, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்தித்து முறையிட்டார்.
ஆனால் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையாததால், சந்திப்பின் நடுவே வெளியேறியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, SIR தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மம்தா பானர்ஜி தானே வழக்கறிஞராக ஆஜராகி தனது தரப்பில் வாதங்களை முன்வைத்தார்.
“ஆறு முறை கடிதம் அனுப்பியும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை. மாநில அரசின் ஆதாரங்களையும் நிராகரிக்கிறது. பெயர்களை நீக்கும் நடவடிக்கையில்தான் அவர்கள் தீவிரம் காட்டுகிறார்கள்,” என்று அவர் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், “SIR விவகாரத்தில் பல உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளன.
எந்த வாக்காளரும் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு,” என தெரிவித்தனர். மேலும், மம்தாவின் மனுவுக்கு 2 நாட்களில் பதிலளிக்க தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
தன்னை நேரடியாக வாதிட அனுமதி வழங்கிய நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்த மம்தா, “மக்களின் வாக்குரிமை காக்கப்பட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார். இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியல் களத்தில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Voter list controversy Supreme Court gives Election Commission 2 day deadline