2026 தேர்தலுக்கு சீமான் சவால்: 55 ஏக்கரில் பிரம்மாண்ட மாநாடு, 234 வேட்பாளர்கள் அறிமுகம்...!
Seeman challenge 2026 elections grand conference 55 acres and introduction 234 candidates
“எப்போதும் நாங்கள் தனிக்காட்டு ராஜா” என்ற தன்னம்பிக்கையுடன், 2026 சட்டமன்றத் தேர்தலை தனித்து சந்திக்கத் தயாராகி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் வெற்றிக்கான தரைமட்டப் பணிகளை வேகப்படுத்தியுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, மாற்றத்தை நாடும் மக்களின் சக்தியை ஒருங்கிணைக்கும் நோக்கில், ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநில மாநாடு’ என்ற பெயரில் பிரம்மாண்டக் கூட்டத்தை திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலம்பட்டி புதூரில் நடத்த கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

வருகிற பிப்ரவரி 21-ந்தேதி நடைபெறவுள்ள இந்த மாநாட்டுக்காக சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் விரிவான திடல் தயார் செய்யப்படுகிறது.இந்த மாநாட்டில் சீமான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எழுச்சியுரையாற்ற உள்ளனர்.
மேலும், 2026 தேர்தலுக்கான 234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதில் 117 ஆண்கள், 117 பெண்கள் மற்றும் சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளர் உள்ளிட்டோர் இடம்பெறுவது கவனம் ஈர்க்கிறது.
மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வு, கட்சியின் வாக்கு வங்கியை உறுதிப்படுத்தும் சக்தி வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. அரசியல் களத்தில் புதிய கட்சிகளின் எழுச்சி பேசப்படும் நிலையில், “என் வழி… தனி வழி” என்ற கோஷத்துடன் சீமான் தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறார்.
முன்னதாக மதுரையில் மாடுகளின் மாநாடு, சென்னையில் மரங்களின் மாநாடு, தர்மபுரியில் மலைகளின் மாநாடு, கல்லணையில் நீர் மாநாடு போன்ற புதுமையான நிகழ்வுகள் மூலம் அரசியல் அரங்கில் தனித்துவத்தை பதித்த அவர், இந்த மாநாட்டையும் மக்கள் இயக்கமாக மாற்ற திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், திருச்சி ஆலம்பட்டி புதூர் மாநாட்டுக்கான கால் கோள் விழா இன்று உற்சாகமாக நடைபெற்றது. கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு, மாநாட்டு பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். மாநாட்டு ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
English Summary
Seeman challenge 2026 elections grand conference 55 acres and introduction 234 candidates