'சோதனையான நேரத்தில் துணை நின்ற திமுகவையும், ஸ்டாலினையும் மறப்பது நியாயமா..?' காங்கிரசை விமரித்துள்ள தமிமுன் அன்சாரி..!
Tamimun Ansari has criticized the Congress asking whether it is fair to forget the DMK which stood by them during a trying time
சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தப் பின்னர் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, 'சோதனையான நேரத்தில் துணை நின்ற திமுகவையும், ஸ்டாலினையும் மறப்பது நியாயமா என்ற கேள்வியை காங்கிரஸுக்கு நினைவூட்டுகின்றேன்' என தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் தொடர்ந்து பேசுகையில், சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்று இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தோம். அவர் மகிழ்ச்சியுடன் எங்களை வரவேற்று பேசினார் என்று குறிப்பிட்டதோடு, அவரிடம், நீங்கள் (மு.க.ஸ்டாலின்) வெற்றி வாய்ப்பை இழந்த செய்தி என்னை மிகவும் பாதித்துள்ளது. நீங்கள் சட்டப்பேரவையில் இருக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம். எனவே நான் எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். நீங்கள் போட்டியிட்டு வெல்ல வேண்டும்' என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

உடனே அவர் (ஸ்டாலின்) என் கைகளை அழுத்தமாக பிடித்து, 'இந்த வார்த்தையை நீங்கள் சொல்லக் கூடாது. நீங்கள் சட்டப்பேரவைக்குள் செல்லவேண்டும்' என உரிமையோடும், கண்டிப்புடன் சொன்ன்னதாக கூறியுள்ளார். அத்துடன், நான் பெற்ற வெற்றியை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியவில்லை என்பதே உண்மை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடு முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாக பெரும் தோல்விகளையும், சோதனைகளையும் காங்கிரஸ் கட்சி சந்தித்துள்ளது. அந்த காலக் கட்டங்களில் காங்கிரஸுக்கு உறுதுணையாக இருந்து திமுக. எல்லா நிலையிலும் அவர்களுக்கு துணையாக நின்று வலிமை சேர்த்தவர் மு.க.ஸ்டாலின். ஆனால், இப்போது இந்தச் சூழலில் காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவளித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. இது எத்தகைய அரசியல் போக்கு என்று தெரியவில்லை என்று விமர்சித்துள்ளார்.
விஜய் பாஜகவை கொள்கை எதிரி என பெயரளவில்தான் விமர்சித்து வந்தார். ஆனால், திமுகவை அரசியல் எதிரி என கடுமையாக சேதப்படுத்தினார் என்பதை சுட்டிக்காட்டியதோடு, இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்து வந்துள்ளது. சோதனையான நேரத்தில் துணை நின்ற திமுகவையும், ஸ்டாலினையும் மறப்பது நியாயமா என்ற கேள்வியை காங்கிரஸுக்கு நினைவூட்டுகின்றேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
English Summary
Tamimun Ansari has criticized the Congress asking whether it is fair to forget the DMK which stood by them during a trying time