மாணவர் படுகொலைகள் எதிரொலி...! போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது யார்...? - வேல்முருகன் ஆவேச கேள்வி...!
Student killings echo Who failed to control drug trade Velmurugan passionate question
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்து வன்முறைச் சம்பவங்களுக்கு இலக்காகி உயிரிழப்பதாகக் குறிப்பிட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், கல்வி நிலையங்களைச் சுற்றிலும் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இளைய தலைமுறையினர் அடுத்தடுத்து வன்முறைச் சம்பவங்களுக்கு பலியாகி உயிரிழக்கும் நிகழ்வுகள் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

கல்வி கற்க வேண்டிய இளம் மாணவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்வது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கேள்வி எழுப்பும் சூழலை உருவாக்கியுள்ளது.கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் 18-ந்தேதி வரை நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களை அரசு கவனத்தில் கொள்ளவில்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் சுட்டிக்காட்டியுள்ள சம்பவங்கள் வருமாறு"
சிவகங்கை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படித்த 15 வயது மாணவர் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 4-ம் வகுப்பு படித்த 9 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்.
தேனி மாவட்டம் போடி அருகே பள்ளிக் குழந்தைகள் இருவர் கிணற்றில் தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்.
கோவை மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சக மாணவர் குழுவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்.
சென்னை திருவொற்றியூரில் பிளஸ்-2 மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 12 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம்.
சேலம் மாவட்டம் கே.ஆர்.தோப்பூரில் 10-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம்.இந்த தொடர் நிகழ்வுகள் மாணவர் சமூகத்தில் வன்முறைப் போக்கு எந்த அளவுக்கு ஊடுருவியுள்ளது என்ற கவலையை ஏற்படுத்துவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா என்ற அச்சத்துடனேயே பெற்றோர் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.கல்வி நிறுவனங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருட்கள் எளிதில் கிடைப்பதாகக் கூறப்படும் நிலையில், அதன் புழக்கத்தைத் தடுக்கத் தவறியது யார்? குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வது மட்டுமே காவல்துறையின் பணியா? உளவுத்துறையும் காவல்துறையும் உரிய முறையில் செயல்படுகின்றனவா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெறும் அறிக்கைகள் வெளியிடுவதுடன் கடந்து செல்லாமல், அவசர நடவடிக்கையாக இதற்கு தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க, கல்வி நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், உளவியல் நிபுணர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவலர்கள் இணைந்த ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழுக்களை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.பள்ளி, கல்லூரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையின் தொடர் ரோந்துப் பணியை கட்டாயமாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு மாணவரின் உயிரும் ஒரு குடும்பத்தின் எதிர்காலத்துடன் தொடர்புடையது. நிர்வாக அலட்சியத்தால் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்துவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Student killings echo Who failed to control drug trade Velmurugan passionate question