திமுக தோல்விக்கான காரணம்..? 'கட்சியினர் சொல்லும் கருத்துகளை மறைக்காமல் தன்னிடம் கூறவேண்டும்'; கள ஆய்வுக் குழுவுக்கு ஸ்டாலின் அறிவுரை..!
Stalin advises the field study committee to reveal the truth regarding the reasons for the DMKs defeat
நடந்து முடிந்த தேர்தலில் திமுக தோல்வியடைந்து ஆட்சியை இழந்துள்ளது. இந்த தேர்தலில் தோல்வி குறித்து கள ஆய்வு மேற்கொள்வதற்காக 38 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது. இந்த குழுவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது தோல்விக்கான காரணம் குறித்து, கட்சியினர் சொல்லும் கருத்துகளை மறைக்காமல் தன்னிடம் கூறவேண்டும் என்று கள ஆய்வுக் குழுவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது;
''கள ஆய்வுக் குழுவுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன். அதன்படி தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சியினர் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலையாகும்.
நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது. 2 பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்கக்கூடாது. அதேபோல், கட்சியினரை மனம்விட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும்.
என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்கள் அறிக்கையில் வழங்குங்கள். நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை. மருத்துவரிடம் பொய் சொல்லக்கூடாது என்பார்கள். நானும் இப்போது அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள். நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும்.
கட்சியினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிரக்கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக்கூடாது. அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும். பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும்.
நீங்கள் தரும் அறிக்கை அடிப்படையில்தான் கட்சியில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப்போகிறேன். அதனால் அறிக்கை துல்லியமாக இருக்க வேண்டும். ஜூன் 5-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும்'' என்று அவர் கூறியுள்ளார்.
English Summary
Stalin advises the field study committee to reveal the truth regarding the reasons for the DMKs defeat