2-வது முறையாக ரத்து செய்யப்பட்ட 'சிங்கப்பெண்' படை விழா...எப்போது செயல்படப் போகிறது த.வெ.க அரசு...? - கனிமொழி
Singappen parade cancelled 2nd time When tvk government going act Kanimozhi
பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் த.வெ.க. தலைவர் மற்றும் தமிழக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த தனி அதிரடிப்படை உருவாக்கப்படும் என அவர் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக தற்போது சிறப்பு படைக்கான நிர்வாக நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சிறப்பு அதிரடிப்படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த பிரிவில் ஒரு காவல் கண்காணிப்பாளர், 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 4 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் பெண் காவலர்கள் மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்காக புதிய சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான காவல்துறை சீருடையை விட மாறுபட்ட தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உடை, அதிரடிப்படை அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேவி ப்ளூ நிற அரைக்கை மேல்சட்டை, காக்கி நிற கால்சட்டை, கருப்பு நிற தொப்பி மற்றும் கருப்பு நிற காலணியுடன் அமைந்துள்ள இந்த சீருடை, பெண்கள் அதிரடிப்படைக்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழா கடந்த 27-ந் தேதி சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருந்தது.
இதில் முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்டு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் முதல்-அமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக விழா திடீரென ஒத்திவைக்கப்பட்டது.இதையடுத்து இன்று (29-05-2026) திட்டம் மீண்டும் தொடங்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜரத்தினம் மைதானத்தில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தபோதும், விழா மீண்டும் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திட்டத்தின் புதிய தொடக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒருமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் விழா ரத்து செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் ஏன் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது? என தி.மு.க. எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கடலூரில் இளம் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவமும், தூத்துக்குடியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவமும் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதை வெளிப்படுத்துகின்றன” என தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களின் தீவிரத்தை உணர்ந்து தவெக அரசு எப்போது செயல்படப் போகிறது? பெண்கள் பாதுகாப்புக்காக இன்று தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட ‘சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் ஏன் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது? தொடர்ச்சியாக நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்க அரசு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது?” எனவும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் களத்தில் புதிய சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Singappen parade cancelled 2nd time When tvk government going act Kanimozhi