இபிஎஸ்-க்கு நிம்மதி பெருமூச்சு...! - சொத்து விவகார வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்...!
sigh relief EPS Chennai High Court dismissed property case
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் வேட்புமனுவில் சொத்து மற்றும் வருமான விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி, தனது வேட்புமனுவில் உண்மையான சொத்து மற்றும் வருமான விவரங்களை மறைத்துள்ளதாக தெரிவித்து, அதே தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் சக்திவேல் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 2021 மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது எடப்பாடி பழனிசாமி சமர்ப்பித்த வேட்புமனுக்களில் இடம்பெற்ற சொத்து விவரங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்தபோது பல்வேறு முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், சில முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து வருமான வரித்துறை விரிவான விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இதே தன்மையிலான வழக்குகள் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றம் விரிவான தீர்ப்புகளை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த விவகாரம் தனிப்பட்ட தேர்தல் மனுவின் மூலம் மட்டுமே எதிர்கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்றும், தற்போதைய மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல என்றும் வாதிட்டார்.
இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
English Summary
sigh relief EPS Chennai High Court dismissed property case