செந்தில் பாலாஜிக்கு அடுத்த ‘செக்’! சிபிஐ வசம் சென்ற மின்மாற்றி ஊழல் வழக்கு...! - அதிரும் தமிழக அரசியல்!
Senthil Balajis next check Transformer scam case handed over CBI Tamil Nadu politics shaking
தமிழ்நாட்டின் மின்சாரத் துறையில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள மின்மாற்றி கொள்முதல் விவகாரம், தற்போது சட்ட ரீதியான தீவிர கட்டத்தை எட்டியுள்ளது. டான்ஜெட்கோ நிறுவனத்திற்கு, 2021 முதல் 2023 வரை சுமார் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் வாங்கப்பட்டதாகவும், அந்த ஒப்பந்த செயல்முறைகளில் ரூ.397 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க. வக்கீல்கள் அணியின் துணைச் செயலாளர் இ.சரவணன், சென்னை உயர் நீதிமன்றம் முன்பு பொதுநல வழக்கை தாக்கல் செய்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை வைத்தார்.

இதனுடன், அறப்போர் இயக்கம் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றத்தை அணுகப்பட்டது.இந்த வழக்குகளின் இறுதி கட்ட விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் முன்னிலையில் தீவிரமாக நடைபெற்றது.
அப்போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல், “மின்மாற்றி கொள்முதல் ஒப்பந்தங்களில் அவருக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை” என வாதிட்டார்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் தங்களது வாதங்களை முன்வைக்க அவகாசம் அளிக்கும் வகையில், வழக்கின் விசாரணை பின்னர் 15-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி, அந்த நாளில் அரசு தரப்பும், மனுதாரர்கள் தரப்பும் இறுதிக்கட்ட வாதங்களை விரிவாக முன்வைத்தனர்.
அதன் பின்னர், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.இப்போது, இந்த முக்கிய வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மின்மாற்றி கொள்முதல் முறைகேடு குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், இரண்டு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ.க்கு ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.இந்த விசாரணைச் செயல்முறையில், தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை, டான்ஜெட்கோ ஆகிய அனைத்தும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெளிவாக தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Senthil Balajis next check Transformer scam case handed over CBI Tamil Nadu politics shaking