'அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்த சீமானின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது': டிடிவி தினகரன் கொந்தளிப்பு..!
Seemans uncivilized speech about Anna and MGR is strongly condemned says TTV Dinakaran
பேரறிஞர் அண்ணா குறித்தும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குறித்த சீமானின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களாக, மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு நிர்வாகம் எப்படி இயங்க வேண்டும் என்ற அடிப்படை இலக்கணத்தை வகுத்துக் கொடுத்த இருபெரும் ஆளுமைகளான பேரறிஞர் அண்ணா மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழர் வாழ வேண்டும், தமிழர் பண்பாடு சிறக்க வேண்டும் என்ற அரும்பெரும் குறிக்கோள் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா குறித்தும், ஏழைகள் ஏழைகளாகவே இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய எம்.ஜி.ஆர். குறித்தும் சீமானின் நாகரீகமற்ற பேச்சு தமிழக மக்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிவார்ந்த கொள்கையின் மூலம் புதிய அரசியல் கோட்பாட்டை உருவாக்கி தமிழகத்தின் தன்னிகரற்ற ஆளுமைகளாக திகழ்ந்த இருபெரும் தலைவர்களும் இயற்கையோடு இயற்கையாக கலந்து விட்டாலும், அவர்கள் நிகழ்த்திய சாதனைகளும், அமல்படுத்திய திட்டங்களும் தமிழக மக்களின் ஆழ்மனதில் நீக்கமற நிறைந்து இன்றளவும் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.
எனவே, யார் மீதோ கொண்ட வன்மத்தை வெளிப்படுத்துவதாக எண்ணி, மறைந்த மாபெரும் தலைவர்கள் மீது நாகரீகமற்ற பேச்சுக்களின் மூலம் அரசியலில் தன் இருப்பைக் காட்டிக் கொள்ள சீமான் இனியும் முயலும் பட்சத்தில் அதற்கான எதிர்வினை தமிழக மக்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் வரும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன்.'என்று டிடிவி தினகரன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Seemans uncivilized speech about Anna and MGR is strongly condemned says TTV Dinakaran