''காலணியால் தாக்க யார் அதிகாரம் கொடுத்தது? இலங்கைத் தமிழரை தாக்கிய ராமநாதபுரம் தனித்துணை ஆட்சியரை கைது செய்யாதது ஏன்?''; சீமான் காட்டம்..! - Seithipunal
Seithipunal


''நம்மை நாடி வந்த ஈழ தமிழ்ச் சொந்தங்களைப் பாதுகாக்க வேண்டிய தமிழ்நாட்டு அரசு அதிகாரியே, காலணியால் தாக்கியுள்ளதை எண்ணும்போது ரத்தக்கண்ணீர் வருகிறது. முகாமில் வசிப்பவர்களைக் காலணியால் தாக்க யார் அதிகாரம் கொடுத்தது? இலங்கைத் தமிழர்களை இழிவுபடுத்திக் கொடூரமாகத் தாக்கிய தனித்துணை ஆட்சியரை கைது செய்யாதது ஏன்?'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;

''ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ்ச் சொந்தம் ஜெகநாதனை தனித்துணை ஆட்சியர் கலைமன்னன் காலணியால் தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

நம்மை நாடி வந்த தமிழ்ச் சொந்தங்களைப் பாதுகாக்க வேண்டிய தமிழ்நாட்டு அரசு அதிகாரியே, காலணியால் தாக்கியுள்ளதை எண்ணும்போது ரத்தக்கண்ணீர் வருகிறது. முகாமில் வசிப்பவர்களைக் காலணியால் தாக்க யார் அதிகாரம் கொடுத்தது? யாருடைய உத்தரவின்பேரில் இத்தகைய கொடுமைகள் அரங்கேறுகின்றன. இலங்கை தமிழ்ச் சொந்தங்களைத் தாக்கினால் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற அலட்சியமா?

சிங்கள இனவெறி ஆட்சியாளர்களால் இலங்கை தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுந்தாக்குதலிருந்து தப்பி, உயிர்வாழ தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து, பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழ்ச்சொந்தங்களுக்கு இன்றளவும் இந்த நாடு குடியுரிமை வழங்க மறுத்து அடிமைகள்போலத் திறந்தவெளி சிறை முகாம்களில் அடைத்து வதைக்கிறது.

வாழும் உரிமைக்காக நாட்டை ஆளும் ஆட்சியாளர்களிடம் போராடும் இலங்கை தமிழ்மக்களை, அரசு அதிகாரிகளும் கொடுமைப்படுத்தினால் அவர்கள் இங்கு வாழ வழிதான் என்ன? சீன நாட்டின் ஏதோ ஒரு மூலையிலிருந்து வந்த திபெத்தியர்களை எண்ணற்ற வசதிகளோடு வாழ்விக்கும் இந்த நாடு, அவர்களுக்கு இழைக்காத கொடுமைகளை எம் தமிழ் மக்களுக்கு மட்டும் இழைப்பதேன்?

இத்தகைய கொடுமைகளை பாகிஸ்தானிலிருந்து வரும் இந்துக்களுக்கோ, சீனாவிலிருந்து வந்த திபெத்தியர்களுக்கோ செய்ய முடியுமா?

நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஐரோப்பிய நாடுகள் கூட அடைக்கலம் தேடி ஏதிலிகளாய் சென்ற லட்சக்கணக்கான இலங்கை தமிழ் மக்களை அள்ளி அரவணைத்துக் குடியுரிமை வழங்குகின்றதே? அவர்களை விடவும், தங்கள் தந்தையர் நாடென நம்பி வந்த இலங்கை தமிழ் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பும் - கடமையும் பத்துகோடி தமிழர்கள் நாங்கள் வரி செலுத்தி, வாக்கு செலுத்தி நேசித்து நிற்கும் இந்நாட்டிற்கு இருக்கிறதா? இல்லையா?

பிறக்க ஒரு நாடு, உயிர் பிழைக்க ஒரு நாடு என்று அரசியல் காரணங்களால் அகதியாக்கப்பட்ட மனிதர்களை, அடித்துத் துன்புறுத்தி அடிமைகளாக நடத்தி, 'வேறு நாட்டிற்குச் செல்லுங்கள்' என்கிறீர்கள். உலகில் உள்ள எல்லா நாடுகளும் இதேபோல் கொடுமைகள் செய்தால் அகதியான மக்கள் எங்கே சென்று வாழ்வது? அகதியாக்கப்பட்டது அவர்கள் குற்றமா? அகதியாக்கிய நாட்டில் அவர்கள் பிறந்ததுதான் குற்றமா? அல்லது அடைக்கலம் தேடி இந்த நாட்டை நம்பி வந்ததுதான் குற்றமா?.

இதில் எங்கே இருக்கிறது மனித உரிமை? எங்கே இருக்கிறது மானுட அறம்? புத்தனும், காந்தியும் போதித்தது இதைத்தானா? அசோகரின் தர்மசக்கரத்தைக் கொடியிலும், காந்தியை தேசப் பிதாவாகவும் கொண்டிருக்கும் நாடு இப்படிச் செய்வது முறைதானா?.

இதுதான் இந்த நாட்டின் சட்டம், நீதி என்றால் அதில் எங்கே இருக்கிறது மானுட நேயம்? அன்றைக்கு இத்தகைய கொடுமைகள் நடந்திருந்தால் நேபாளத்தில் பிறந்த புத்தர் இந்தியாவிலுள்ள புத்த கயாவிற்கும், குஜராத்தில் பிறந்த காந்தி தென்னாப்பிரிக்காவிற்கும் சென்றிருக்கத்தான் முடியுமா?

உலகம் தழுவி நேசித்து மனிதப் புனிதர்களாக அவர்கள் உயர்ந்திருக்கத்தான் முடியுமா? உலகிற்கு அன்பையும், அறத்தையும் கற்பித்த ஞானிகள் பலர் வாழ்ந்த இந்த நாடானது, நம்மைப்போல ரத்தமும், சதையும், உயிரும், உணர்வும் கொண்ட சக மனிதர்களிடம் இப்படி வெறுப்புகாட்டி விரட்டுவது முறைதானா? அவர்கள் தமிழர்கள் என்பதற்காக எந்தக் கூடுதல் சலுகையும் இந்த நாடு தரவேண்டாம். குறைந்தபட்சம் நம்மை மனிதர்கள் என்பதற்காவது மனிதநேயத்தோடு நடத்தலாமே?.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ்ச்சொந்தம் ஜெகநாதனை காலணியால் தாக்கிய தனித்துணை ஆட்சியர் கலைமன்னனை கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், ராமநாதபுரத்தில் இலங்கை தமிழ்ச் சொந்தங்களுக்கு ஆதரவாக மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman questions why the Ramanathapuram Additional Deputy Collector who assaulted Sri Lankan Tamils has not been arrested


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->