பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கல்வித்தகுதி சர்ச்சை: புயலைக் கிளப்பும் குற்றச்சாட்டுகள்! வரிசையாக சிக்கும் தவெக எம்.எல்.ஏகள்!
School Education Minister Rajmohan educational qualification controversy Stormy allegations MLAs are getting caught in a row
தமிழ்நாட்டின் புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனின் கல்வித்தகுதி குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விவாதங்களும் சர்ச்சைகளும் வெடித்துள்ளன. மாநிலத்தின் கல்விக் கொள்கைகள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரின் கல்வித்தகுதியே கேள்விக்குறியாகியுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாகியுள்ளன.
அமைச்சர் ராஜ்மோகன் சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் படித்ததாகவும், ஆனால் தனது பொறியியல் படிப்பை முழுமையாக முடிக்காமல் அரியர் வைத்திருந்ததாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், அவர் கடந்த ஆண்டு வரை கூட அரியர் தேர்வுகளை எழுதி வந்ததாக சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கல்வித்தகுதி விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யும் உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிடுவது கட்டாயம். ஆனால், ராஜ்மோகன் தனது வேட்புமனுவில் பொறியியல் படிப்பு குறித்த தகவலை பதிவு செய்யவில்லை என்றும், இதுவே தற்போது சந்தேகத்தை அதிகரித்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், அவர் பெற்றதாக கூறப்படும் டிப்ளோமா சான்றிதழும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை “Indian Institute of Management and Technology” என்ற கல்வி நிறுவனத்தில் அவர் டிப்ளோமா பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனத்திற்கு UGC, AICTE அல்லது தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் போன்ற அதிகாரப்பூர்வ அங்கீகாரங்கள் இல்லை என்று சமூக வலைதளங்களில் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அமைச்சர் தனது பிளஸ் டூ படிப்பை முடித்த பல ஆண்டுகள் கழித்தே இந்த டிப்ளோமா சான்றிதழைப் பெற்றதாகவும், அது முறையான கல்வி நடைமுறையா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக பெரிய விவாதமாக மாறியுள்ள நிலையில், இரண்டு முக்கிய கேள்விகள் தற்போது முன்வைக்கப்படுகின்றன:
-
அமைச்சர் ராஜ்மோகன் தனது பொறியியல் படிப்பை முழுமையாக முடித்தாரா?
-
முடித்திருந்தால் ஏன் அதை தேர்தல் உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை?
வேட்புமனுவில் தவறான தகவல் வழங்கப்பட்டதாக அல்லது தகவல் மறைக்கப்பட்டதாக நிரூபிக்கப்பட்டால், அது சட்ட ரீதியான பிரச்சனையாக மாறக்கூடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், சமூக வலைதளங்களில் பலரும் “அங்கீகாரம் இல்லாத நிறுவனம் மூலம் சான்றிதழ் பெற்றவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருப்பது சரியா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை அமைச்சர் ராஜ்மோகன் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. இந்த விவகாரம் அடுத்த கட்டத்தில் எந்த திசைக்கு செல்கிறது என்பது அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்படுகிறது.
English Summary
School Education Minister Rajmohan educational qualification controversy Stormy allegations MLAs are getting caught in a row