விஜய்யை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு ஆர்.எஸ். பாரதி சர்ச்சை பேச்சு.. “கடைசியில் என்ன நடந்தது?” என எச்சரிக்கை!
RS Bharathi sparks controversy by comparing Vijay to Jayalalithaa warns What happened in the end
தமிழக அரசியலில் திமுக, அதிமுகவை பின்னுக்குத் தள்ளி தவெக ஆட்சியமைத்துள்ள நிலையில், ஆளும் கட்சியான தவெகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், முதல்வர் விஜய்யை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ். பாரதி, முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். அப்போது, “விஜய் அவர்களே.. இப்போதுதான் உங்களுக்கு கேடு காலம் ஆரம்பித்துள்ளது” என்று கூறிய அவர், 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்முறையாக ஆட்சிக்கு வந்தபோது ஏற்பட்ட டான்சி நில விவகாரத்தை சுட்டிக்காட்டினார்.
மேலும், விஜய் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே டெண்டர் தொடர்பான ஊழல் வழக்கு எழுந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதனை ஜெயலலிதா ஆட்சியின் தொடக்கத்தில் ஏற்பட்ட பிரச்சனையுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
ஜெயலலிதா முதல்முறையாக ஆட்சிக்கு வந்தபோது எதிர்க்கட்சியில் கருணாநிதி மட்டுமே வெற்றி பெற்றிருந்ததாகவும், அப்போது ஜெயலலிதாவுக்கு இருந்ததாக தான் கருதும் அதிகார திமிரைப் போலவே தற்போது விஜய்க்கும் இருப்பதாகவும் ஆர்.எஸ். பாரதி விமர்சித்தார்.
தொடர்ந்து, “அதுதான் கடைசிவரை அந்த அம்மாவை சிறைக்கு கொண்டு சென்றது” என்று கூறிய அவர், தற்போதைய தவெக ஆட்சியிலும் முதல் வழக்கு அப்படித்தான் தொடங்கியுள்ளதாக விமர்சித்தார்.
அதோடு நிற்காமல், “சென்டிமென்டலாக முதன்முதலாக இவரும் அந்த இடத்தில் இருந்துதான் ஆரம்பித்துள்ளார். கடைசியாக ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை” என்று ஆர்.எஸ். பாரதி பேசியுள்ளார்.
அவரது இந்தப் பேச்சு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. குறிப்பாக, விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை ஜெயலலிதாவின் அரசியல் பயணத்துடன் ஒப்பிட்டு, அவரது இறுதிக்கால அரசியல் நிகழ்வுகளை மறைமுகமாக சுட்டிக்காட்டியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆர்.எஸ். பாரதியின் பேச்சுக்கு தவெக தரப்பிலும் அதிமுக தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அரசியல் விமர்சனம் என்ற பெயரில் மறைந்த தலைவரின் பெயரை பயன்படுத்தி முதல்வர் விஜய்க்கு எச்சரிக்கை விடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
தவெக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே திமுக–தவெக இடையே அரசியல் மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஆர்.எஸ். பாரதியின் இந்தப் பேச்சு தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
RS Bharathi sparks controversy by comparing Vijay to Jayalalithaa warns What happened in the end