கோப்புகளை வெளியிடுவதில் தயக்கம் இல்லை...! - விஜய் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய தகவல்...!
No hesitation releasing files Minister Rajmohan gives important information about Vijay
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஊழல் குற்றச்சாட்டுகள், கோப்புகள் வெளியிடுவது மற்றும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகள் தொடர்பாக ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில், “முதல்வரின் மேசையில் கோப்புகள் இருப்பதாகவும், அவற்றை திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

அந்தக் கோப்புகளை திறந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள்? எதற்காக காலதாமதம் செய்கிறீர்கள்? ஜோதிடர் கூறினால்தான் கோப்புகளை திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? நடவடிக்கை எடுப்பேன் என்று கூறப்படும் மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்” என்று தெரிவித்தார்.
மேலும், ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சிக்கு பதிலளிக்கும் போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர் விமர்சித்தார். சட்டப்பேரவையில் பாடல்கள் பாடப்படுவது குறித்தும் சுட்டிக்காட்டிய அவர், “நாங்கள் சட்டப்பேரவைக்கு வந்திருக்கிறோமா அல்லது பாடல் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு பாடல்கள் இடம்பெறுகின்றன” என்று கிண்டலாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகள் காணொளிகளாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருவதாக தெரிவித்தார்.“நான் சட்டப்பேரவையில் பேசிய சில கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.
ஆனால் அவை சமூக வலைதளங்களில் காணொளிகளாக வெளியாகின்றன. அவைக்குறிப்பில் இருந்து கருத்துகளை நீக்குவதால் மட்டும் அவற்றை மக்கள் பார்ப்பதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், “ஜோதிடம் குறித்து பேசுகிறார்கள்.
ஜோதிடம் பார்த்து மஞ்சள் துண்டு அணிந்த கதையெல்லாம் எங்களுக்கும் தெரியும். எப்போது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அப்போது சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று காரசாரமாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழக சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்கள் அனைத்தும் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவதாக தெரிவித்தார்.“யார், எந்த தொகுதியின் சார்பில் கேள்வி எழுப்புகிறார்கள், அதற்கு என்ன பதில் அளிக்கப்படுகிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நேரலை ஒளிபரப்பு வழங்கப்படுகிறது.
இது ஆளும் கட்சிக்கு மட்டும் சாதகமான முறையில் இல்லாமல், முழுமையான நேரலையாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.கோப்புகளை திறந்து ஆய்வு செய்வதில் முதல்-அமைச்சர் விஜய்க்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஊழல் தொடர்பான கோப்புகள் நிச்சயமாக முதலமைச்சர் விஜயால் வெளியிடப்படும்.
எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள கோரிக்கையும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்” என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.இதனிடையே, சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துகளை காணொளியாக சமூக வலைதளங்களில் வெளியிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் எச்சரிக்கை விடுத்தார்.
இதனால், ஊழல் கோப்புகள் விவகாரம், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துகள் மற்றும் அவற்றின் சமூக வலைதள வெளியீடு தொடர்பாக சட்டப்பேரவையில் பரபரப்பான சூழல் நிலவியது.
English Summary
No hesitation releasing files Minister Rajmohan gives important information about Vijay